காஞ்சி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்தது. இதன்காரணமாக காஞ்சிபுரம் பாலாறு, செய்யாறு ஆகியவற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் செய்யாற்றில் விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் செல்கிறது.
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் இந்த செய்யாற்றின் குறுக்கே தரைப்பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த தரைப்பாலம் தற்போது சேதமடைந்த நிலையில்உள்ளது. இது கடந்த 2015-ம் ஆண்டே சேதமடைந்தது. ஆனால் இது முழுமையாக சீரமைக்கப்படாமல் தற்காலிகமாக கம்புகள், மணல் மூட்டைகள் வைத்து போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. இந்த பாலத்தை சீரமைக்க பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இந்த தரைப்பாலம் மேலும் சேதமடைந்துள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து உத்திரமேரூர் நோக்கியும், உத்திரமேருரில் இருந்து காஞ்சிபுரம் நோக்கியும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த வாகனங்கள் தரைப்பாலத்தை ஆபத்தான முறையில் கடக்க வேண்டியுள்ளது. அசம்பாவிதங்கள் நடைபெறும் முன்பு சேதமடைந்த வெங்கச்சேரி தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்துகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago