திமுக எம்பிக்கு எதிரான கொலை வழக்கின் - தற்போதைய நிலை குறித்து தெரிவிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு உத்தரவு :

முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கின் தற்போதைய நிலை குறித்து இன்று தெரிவிக்க சிபிசிஐடி போலீஸாருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் திமுக எம்பி டி.ஆர்.வி.எஸ்.ரமேஷுக்கு சொந்தமான முந்திரி ஆலையில் பணியாற்றி வந்த பண்ருட்டியைச் சேர்ந்த தொழிலாளி கோவிந்தராஜ் மர்ம மான முறையில் மரணமடைந்தார். முதலில் சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு பி்ன்னர் கொலை வழக்காக மாற்றப்பட்டு சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் கடலூர் திமுக எம்பி ரமேஷ் பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர் அவர் கடலூர் கிளைச் சிறையில் அடைக் கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தனக்கு ஜாமீன் கோரி ரமேஷ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி போலீஸார் தரப்பில், முந்திரி ஆலையில் இருந்து7 கிலோ முந்திரியை திருடியதற்காக கோவிந்தராஜ் தாக்கப்பட்டுள் ளதாகவும் சம்பவ இடத்தில் எம்பி ரமேஷ் இருந்துள்ளார் எனவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றும் இந்த வழக்கின் புலன் விசாரணை இன்னும் முடிவடையவில்லை என்பதாலும், ரமேஷ் அரசியல் ரீதியாக செல்வாக்கு மிக்க நபர் என்பதாலும் அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது, என எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது எம்பி ரமேஷ் தரப்பில், தொழிற்சாலையில் உள்ள6 பேர் சேர்ந்து தான் அவரை தாக்கியதாகவும் தனக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் வாதிடப்பட்டது.

மரணமடைந்த கோவிந்த ராஜிவின் மகன் செந்தில்வேல் தரப்பில், மனுதாரர் திமுக எம்பி என்பதால் அவருக்கு சலுகை காட்டப்படுவதாகவும் விசாரணை முறையாக நடைபெறவில்லை என்பதால் சிபிஐ விசாரணை கோரியுள்ளதாகவும் திமுக எம்பிரமேஷூக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது சிபிசிஐடி போலீஸார் தரப்பில், இந்த சம்பவம் தொடர்பாக மேலும்பலரிடம் விசாரணை நடத்தவேண்டியிருப்பதாக தெரிவிக்கப் பட்டது.

இதையடுத்து நீதிபதி, இந்த வழக்கின் புலன் விசாரணை குறித்த தற்போதைய நிலை, எத்தனை சாட்சிகள் இன்னும் விசாரிக்கப்பட வேண்டியுள்ளது போன்ற விவரங்களை தாக்கல்செய்ய சிபிசிஐடி போலீஸாருக்கு உத்தரவிட்டு, விசாரணையை இன்று (நவ.18) தள்ளி வைத் துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE