ஆந்திரா, கர்நாடகா எல்லைகளில் கனமழைமார்கண்டேய நதிக்கு நீர்வரத்து அதிகரிப்பு : மலர் தூவி விவசாயிகள் வரவேற்பு

By செய்திப்பிரிவு

4 ஆண்டுகளுக்குப் பிறகு மார்கண்டேய நதியில் தண்ணீர் செல்வதால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், ஆரத்தி எடுத்தும், மலர்கள் தூவியும் பூஜை செய்து வழிபட் டனர்.

கர்நாடக, ஆந்திர மாநில எல்லையையொட்டி வேப்பனப் பள்ளி ஊராட்சி ஒன்றியம் உள்ளது. இப்பகுதியில் கர்நாடக மாநில எல்லையான முத்தியால் மடுகு என்ற மலைப் பகுதியில் இருந்து வெளியேறும் சிறு சிறு ஓடைகள் மற்றும் ஆந்திர மாநில எல்லையான ஓ.என்.புதூரில் இருந்து திம்மம்மா ஏரி வழியாகவும் தண்ணீர்வந்து மார்கண்டேய நதியாக உருவாகிறது. இப்பகுதியில் உள்ள மலைகளில் இருந்து வெளியேறும் நீர் கடந்த காலங்களில் மார்கண்டேய நதியில் ஆண்டு முழுவதும் வந்து கொண்டிருந்தது. இந்நதியின் குறுக்கே மாரச்சந்திரம் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பணை வழியாக எண்ணேகொல்புதூர் தென்பெண்ணை ஆற்றிலும், இடதுபுற கால்வாய் நீர், மாரச்சந்திரம், ஜீனூர், ஜிங்கலூர் வழியாக கிருஷ்ணகிரி பெரிய ஏரிக்குச் செல்கிறது. ஆந்திரா அரசு, கர்நாடகா அரசு தடுப்பணைகள் கட்டியதால் மார்கண்டேய நதியில் நீர்வரத்து முற்றிலும் நின்றது. கடந்த 2002, 2017 ஆண்டுகளில் மட்டும்தான் இந்நதியில் நீர்வரத்து இருந்தது.

இந்நிலையில் தற்போது ஆந்திரா, கர்நாடகா எல்லையில் கனமழை பெய்து வருவதால் வனப்பகுதியிலிருந்து உருவாகும் திம்மம்மா ஏரி, கர்நாடகா வனப்பகுதியை ஒட்டிய தமிழக எல்லைப் பகுதிகளான பதிமடுகு, பாலனப்பள்ளி உள்ளிட்ட மலைப்பகுதிகளிலிருந்து அதிகளவிலான நீர் உள்ளது. இதனால் 4 ஆண்டுகளுக்கு பிறகு மார்கண்டேய நதிக்கு தண்ணீர் வந்துள்ளது. பாலனப்பள்ளி, தீர்த்தம் வழியாகச் செல்லும் நீரில் விவசாயிகள் மலர்கள் தூவியும் ஆரத்தி எடுத்தும் வரவேற்றனர்.

கிருஷ்ணகிரி அணை

தொடர் மழையால் நேற்று காலை கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 1739 கனஅடியாக இருந்தது.

அணையில் இருந்து விநாடிக்கு 1804 கனஅடி தண்ணீர் ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. அணை தரைப்பாலத்திற்கு மேல் தண்ணீர் செல்வதால், அவ்வழியே பூங்காவிற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தென்பெண்ணை ஆற்றில் அதிகள வில் தண்ணீர் செல்வதால், கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என பொதுப்பணித்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்