பண மோசடி புகாரில் தனியார் பேருந்து நிறுவனம், 4 பேர் மீது வழக்குப் பதிவு :

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள டி.பி.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்தவர் தமிமுன் அன்சாரி(49). காய்கறி மற்றும் பழங்கள் ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வரும் இவர், ரூ.5 லட்சத்துக்கு மாதம் ரூ.11 ஆயிரம் பங்குத்தொகை தருவதாக கூறிய தால், தஞ்சாவூரில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் ஆம்னி பேருந்தில் பங்குதாரராக சேர ரூ.15 லட்சம் முதலீடு செய்துள்ளார்.

இந்நிலையில், தஞ்சாவூர் ரகுமான் நகரைச் சேர்ந்த டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தின் உரிமையாளர் கமாலுதீன், செப்.19-ம் தேதி இறந்து விட்டார். அதன் பின்னர் தமிமுன் அன்சாரிக்கு பணம் வழங்கப்படவில்லை. இதுகுறித்து தனியார் நிறுவனத்தில் கேட்டபோதும் உரிய பதில் அளிக்காததால், அவர் தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் புகார் செய்தார்.

புகாரின்பேரில், டிஎஸ்பி மனோகரன் மற்றும் போலீஸார், தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனம், நிறுவன உரிமையாளர் கமாலுதீன், அவருடைய சகோதரர் அய்யம்பேட்டையைச் சேர்ந்த அப்துல்கனி, கமாலுதீனின் மனைவி ரெகனாபேகம், மேலாளர் நாராயணசாமி ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும், இந்த நிறுவனம் 1000-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.200 கோடிக்கும் மேல் மோசடி செய்திருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE