தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகே தற்காலிக கூடாரங்கள் அமைத்து நரிக்குறவர் மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியை ஆட்சியர் கி.செந்தில் ராஜ் ஆய்வு செய்தார். அப்போது ஆட்சியருக்கு பாசி மணி மாலை அணிவித்து நரிக்குறவர்கள் வரவேற்றனர். அவர்களின் குறைகளை கேட்டறிந்த ஆட்சியர், குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தார். மேலும், 2 குழந்தைகளுக்கு பெயர் சூட்டினார்.
ஆட்சியர் கூறும்போது, “ விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கவும், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்யவும் தமிழக முதல்வர் உத்தரவின்பேரில் தலைமைச் செயலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி மாவட்டத்தில் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் குறித்த கணக்கெடுப்பு நடைபெறுகிறது.
அதன் ஒரு பகுதியாக நரிக்குறவர் வசிக்கும் பகுதியில் ஆய்வுசெய்யப்பட்டுள்ளது. இங்கு வசிக்கும் மக்களுக்கு ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவை விரைவில் வழங்கப்படும். அதற்காக இந்த பகுதியிலேயே சிறப்பு முகாம் நடத்தப்படும். தகுதியானவர்களுக்கு முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும். நரிக்குறவர்களுக்கு சரியான இடத்தை தேர்வு செய்து வீடு கட்டிக் கொடுக்கப்படும். அவர்கள் தொழிலுக்கு சென்று வரும் வகையில் தூத்துக்குடிக்கு மிக அருகிலேயே இன்னும் ஒரு வாரத்தில் இடம் தேர்வு செய்யப்படும்” என்றார் ஆட்சியர்.
தூத்துக்குடியில் வசிக்கும் நரிக்குறவர் மக்களுக்கு வீடு கட்டுவதற்காக கடந்த 2017-ல் வசவப்பபுரம் பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்த பகுதி பாறைநிலமாக இருந்ததாலும், அவர்களது தொழிலுக்கு வசதியற்ற நிலையில் இருந்ததாலும் அந்த இடத்தை நரிக்குறவர் மக்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago