திருப்பத்தூரில் தமுமுகவினர் சாலை மறியல் :

திருப்பத்தூர்: திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து தமுமுகவினர் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட ஆரிப்நகரில் 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், கடந்த பல மாதங்களாக அப்பகுதி யில் கழிவுநீர் கால்வாய் துார்வாரப்படாமல் இருப்பதால், மழைநீருடன் கழிவுநீர் தேங்கி அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

மேலும், இதனால் அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.

இந்நிலையில், திருப்பத்தூர் நகரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் ஆரீப்நகர் முழுவதும் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால், பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, திருப்பத்தூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து தமுமுகவினர் நேற்று திருப்பத்துார் நகர காவல் நிலையம் அருகே திருப்பத்தூர் - வாணியம்பாடி பிரதான சாலையில் அமர்ந்து நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்தத, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வில்சன் ராஜசேகர், நகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பிறகு, ஆரீப்நகரில் கழிவுநீர் கால்வாய் துார்வாரி சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில், சாலை மறியல் போராட்டத்தை கைவிட்ட தமமுகவினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்