கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள தயங்குபவர்களுக்கு புதிய வகை வைரஸ் தொற்று பரவும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும் என ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, ‘‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்த நிறைய பேர் தயக்கம் காட்டிவருகின்றனர். தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு புதிய வகை வைரஸ் தொற்று பரவும் என மருத்துவ துறையினர் எச்சரித்துள்ளனர். தடுப்பூசி செலுத்திக்கொண்டால் வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்கலாம்.
அப்படியே வைரஸ் தொற்று பரவினாலும் பாதிப்பு குறைவாக இருக்கும். கரோனா தடுப்பூசி மீது மக்களுக்கு உள்ள சந்தேகத்தாலும், ஊசியை போட்டுக்கொள்ள தாமதம் காட்டி வருவதால் புதிய வகை வைரஸ் தொற்றுக்கு ஆளாக நேரிடும் என்பதை மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தடுப்பூசி முகாம் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. தினசரி 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கட்டுப்பாட்டு அறை வாயிலாக தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ராணிப் பேட்டை மாவட்டத்தில் மீண்டும் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலகின் பல நாடுகளில் கரோனா 3-வது அலை பெரிய பாதிப்பை ஏற்படுத்தி அதன் மூலம் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. நம்நாட்டில் மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் தீவிர முயற்சியால் கரோனா தொற்று கட்டுக்குள் உள்ளது. இருந்தாலும், தடுப்பூசி செலுத்தாதவர்களால் மற்றவர்களுக்கு கரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, தமிழக அரசு அறிவுறுத்தல்படி இம்மாதம் இறுதிக்குள் 100 சதவீதம் தடுப்பூசியை செலுத்த வேண்டும் என முயற்சிகள் எடுக்கப்பட் டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் 12.66 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இதில், 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 9.60 லட்சம் ஆகும். தற்போதைய நிலவரப்படி 7 லட்சத்து 89 ஆயிரத்து 507 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதேபோல, 18 வயது பூர்த்தியடைந்த 8,028 மாற்றுத்திறனாளி களில் இதுவரை 4,645 பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3.11 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன. இதில், 1.5 லட்சம் நபர்கள் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
எனவே, தமிழக அரசு உத்தரவுபடி இனி வாரம் 2 முறை கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாமில் விடுபட்டவர்கள் தவறாமல் கலந்து கொண்டு கரோனா தடுப்பூசியை செலுத்தி தொற்றில் இருந்து பாதுகாப்பதுடன், மற்றவர் களையும் பாதுகாக்க வேண்டும். 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டத்தை கொண்டு வர பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago