திருப்பூர் மாவட்டத்தில் பொங்கலூர் வட்டாரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மை அறிவியல் நிலைய மண்ணியல் துறை உதவிப் பேராசிரியர் ச.தேன்மொழி மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் க.வி.ராஜலிங்கம் ஆகியோர் ஒருங்கிணைந்து தர உரமேலாண்மையை கடைபிடிப்பதன் அவசியம் பற்றி விவசாயிகளிடையே எடுத்துரைத்தனர்.
அப்போது அவர்கள் பேசியதாவது: வேளாண்மையை முதன்மை தொழிலாக கொண்ட நாடு இந்தியா. கடந்த 1960-ம் ஆண்டுமுன்பு விவசாயிகள் இயற்கை உரத்தை அதிகம் பயன்படுத்தி வந்தனர். அதன்பின்னர் செயற்கைஉரத்தை அதிக அளவு பயன்படுத்தியதால், மண்ணின் வளம் குறையத் தொடங்கியது. இழந்த மண் வளத்தை மீட்டெடுக்க தற்சமயம் நிலம் சார்ந்த அணுகுமுறையைக் கையாள்கிறோம்.
நில மேலாண்மை என்பது மண், பயிர், ரகம், தட்பவெப்பநிலை, சுற்றுச்சூழல், நீர்வளம் மற்றும் ஒருங்கிணைந்த மேலாண்மை முறைகள் அடங்கியதாகும்.
மண் என்பது உலகின் இயற்கை ஆதாரங்களில் முக்கியத்துவம் வாய்ந்த வளமாகும். அதிக உணவுஉற்பத்திக்கு, நாம் சரியான அளவுகளில் ரசாயன இடுபொருட்களைப் பயன்படுத்தாததால் மண் மற்றும் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், நீடித்த நிலையான வேளாண்மை கிடைக்க மண்வளம் சார்ந்த வேளாண்மை அவசியம்.
மண் வளமாக இருப்பின் விளைபொருட்கள் தரமாகவும், சத்துள்ளதாகவும் இருக்கும். மனிதசமூகமும் வளம் பெறும். மண்ணில் அங்ககக் கரிமத்தின் அளவை அதிகரித்தல், மண் ஆய்வுப்படி பயிர்களுக்கு சமச்சீர் உரமிடுதல், உயிர் உரங்களின் பயன்பாடு, பசுந்தாள் உரமிடுதல், மண் ஊடு பயிர்களின் பயன்பாடுகள், பயிர் சுழற்சி முறைகள், மண் அரிமானத்தைத் தடுத்தல் மூலம் மண்வளத்தை மேம்படுத்தலாம். பயிருக்கு தேவையான ஊட்டங்களை அங்கக உரங்கள் (பசுந்தாள் உரங்கள், தொழு உரம், கம்போஸ்ட்) மண் ஆய்வின் அடிப்படையில் அமைந்த சமச்சீர் ரசாயன உரப் பயன்பாடு மற்றும் உயிர் உரங்கள் மூலம் ஒருங்கிணைத்து அளிப்பதே ஒருங்கிணைந்த பயிர் ஊட்டச்சத்து மேலாண்மை ஆகும். இதனால் பயிருக்குத் தேவையான ஊட்டங்களைத் தேவைக்கேற்ப சீராக கொடுப்பதுடன், ரசாயன உரங்களின் செலவினைக் குறைக்கலாம்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago