திருப்பூரில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அரசு அதிகாரிகளின் பயன்பாட்டுக்காக எடுக்கப்பட்ட வாகனங்களுக்கான வாடகைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி, திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் வாடகை கார் உரிமையாளர்கள் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது: சட்டப்பேரவைத் தேர்தலில், அரசு அதிகாரிகளின் பயன்பாட்டுக்காக ஒப்பந்த அடிப்படையில் வாடகை கார்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியை சேர்ந்த சுமார் 57 வாடகைக் கார்களை அரசு சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அதிகாரிகள பயன்படுத்தினர்.
தேர்தல் நடந்து முடிந்ததும் அடுத்த 3 அல்லது 4 மாதங்களுக்குள் அந்தந்த கார்களுக்கான வாடகைத் தொகை முழுவதும் ஒப்படைக்கப்படும் என்ற உறுதியின் அடிப்படையில், வாடகைக் கார்களை இயக்க உரிமையாளர்கள் சம்மதித்து இயக்கினர். ஆனால் தேர்தல் முடிந்து 7 மாதங்கள் ஆகியும் இதுவரை வாடகை தொகை வழங்கப்படவில்லை. அவிநாசி வட்டத்தில் மட்டும், ரூ. 13 லட்சத்து 50 ஆயிரம் நிலுவையில் உள்ளது. உடனே வாடகை தொகையை வழங்க வேண்டும், என்றனர். இதையடுத்து கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சு.வினீத்திடம் மனு அளித்துவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago