ஈரோட்டில் 3 முகாம்களில் வசிக்கும் - இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.57 லட்சம் மதிப்பில் நல உதவி : வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி தகவல்

By செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டம் அறச்சலூர் மற்றும் ஈஞ்சம்பள்ளியில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்பவர்களுக்கு ரூ.13.41 லட்சம் மதிப்பிலான துணிகள், பாத்திரங்கள் மற்றும் சமையல் எரிவாயு இணைப்புகளை வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் அறச்சலூர், ஈஞ்சம்பள்ளி மற்றும் பவானிசாகர் ஆகிய மூன்று பகுதிகளில் இலங்கைத் தமிழர் முகாம்கள் உள்ளன. இதில், அறச்சலூர் முகாமில் வசிப்போருக்கு ரூ.7. 55 லட்சம் மதிப்பீட்டிலும், ஈஞ்சம்பள்ளி முகாமில் வசிப்போருக்கு ரூ.5.86 லட்சம் மதிப்பீட்டிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் பவானிசாகர் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 3,152 இலங்கைத் தமிழர்களுக்கு ரூ.24.17 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளன. மாவட்டம் முழுவதும் மூன்று முகாம்களிலும் வசிக்கும் 5 ஆயிரத்து 790 பயனாளிகளுக்கு ரூ.56.97 லட்சம் மதிப்பிலான துணிகள், பாத்திரங்கள் மற்றும் சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படவுள்ளது, என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் எச்.கிருஷ்ணன் உண்ணி, மொடக்குறிச்சி தொகுதி பாஜக எம்.எல்.ஏ. சி.சரஸ்வதி, ஈரோடு கோட்டாட்சியர் பிரேமலதா, வட்டாட்சியர்கள் சண்முகசுந்தரம் (மொடக்குறிச்சி), மகேஸ்வரி (இலங்கை தமிழர் மறுவாழ்வு) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்