கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தாய், மகள் :

By செய்திப்பிரிவு

தாமரைப்பாக்கம் அணைக்கட்டு அருகே கொசஸ்தலை ஆற்றில் தாய், மகள் அடித்து செல்லப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அருகே தாமரைப்பாக்கம் அடுத்த புன்னப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் மனைவி நிரோஷா(38). இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் உயிரிழந்த நிலையில், தர்ஷினி, வினிதா(8) ஆகிய 2 மகள்களுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை நிரோஷா தன் இளைய மகள் வினிதாவுடன் வீட்டிலிருந்து, இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றார். ஆனால், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. நிரோஷாவின் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் பலனில்லை.

இதுகுறித்து, தகவல் அறிந்த வெங்கல் போலீஸார், தாயையும், மகளையும் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை தாமரைப்பாக்கம் அணைக்கட்டு அருகே கொசஸ்தலை ஆற்றுக்கரை பகுதியில் நிரோஷாவின் இருசக்கர வாகனம், நிரோஷா மற்றும் வினிதா ஆகியோரின் காலணிகள் இருந்தது தெரிய வந்தது.

போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில், தாயும் மகளும், கொசஸ்தலை ஆற்றில் இறங்கிய போது நீரில் அடித்துச் செல்லப்பட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து, தேர்வாய் சிப்காட் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடம் விரைந்து, தாய், மகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். காலை முதல் மாலை வரை தேடிய நிலையிலும் இருவரும் கிடைக்கவில்லை. ஆகவே, இன்றும் தேடும் பணி தொடரும் என போலீஸ்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்