மழையில் இருந்து பயிர்களை காப்பது எப்படி? : வடிகால் வசதி, கவாத்து செய்தல் அவசியம் பற்றி விளக்கம்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் அறிக்கை: மழை பொழிவு சீரான இடைவெளியில் கிடைக்கப்பெறாமல், அதிகளவு ஓரிரு நாட்களில் பெறும்போது பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. வெண்டை, கத்தரி, கொத்தவரை, மிளகாய் மற்றும் படர்கொடி வகைகளுக்கு முறையாக மண் அணைப்பது மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்துவதன் மூலம், நீர் தேக்கத்தினால் வேர்கள் அழுகுவதை தவிர்க்கலாம். காய்கறி பயிர்களில் காய்ந்து போன இலைகளை அகற்ற வேண்டும்.

வாழை பயிரிட்ட வயல்களில் தண்ணீர் தேங்கி இருந்தால், வடிகால் அமைத்து வடிந்த பின்னர் பெவிஸ்டின் மருந்தை 2 கிராம் வீதம் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து வாழையின் கிழங்கு மற்றும் வேர்பகுதி நன்கு நனையும்படி ஊற்றி, வாடல் மற்றும் பூஞ்சாண் நோய் தாக்குதல் ஏற்படாத வகையில் பாதுகாக்கலாம்.

பந்தல் காய்கறி பயிர்களுக்கு இலைவழி உரமளித்து பயிரின் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். குச்சி பந்தல் அமைத்து கொடிவகை காய்கறி பயிர் செய்வோர் மண் அணைத்தும், வலுவிழந்த பகுதிகளில் கூடுதல் ஊன்று கோல்கள் அமைத்தும் பந்தல் சாய்வதை தடுக்க வேண்டும்.

மா, கொய்யா, சப்போட்டா மற்றும் நெல்லி போன்ற பல்லாண்டு பயிர்களில் காய்ந்த, பட்டுப்போன, தேவையற்ற பக்கக் கிளைகள் மற்றும் அதிகப்படியான இலைகளை கவாத்து செய்வதன் மூலம் மரத்தின் சுமையை குறைத்து, காற்றிலிருந்து பாதுகாக்கலாம். கவாத்தின் போது வெட்டப்பட்ட பகுதியில் காப்பர் ஆக்சிகுளோரைடு 300 கிராம் 1 லிட்டர் நீரில் கலந்து பூசுவதன் மூலம் பூச்சி மற்றும் நோய் தாக்குவதைத் தவிர்க்கலாம். அடிமரத்தை சுற்றி மண் அணைக்க வேண்டும். 1 முதல் 3 வயதுள்ள கன்றுகள் மற்றும் ஒட்டுச்செடிகளை முட்டுக் கொடுப்பதற்கு குச்சிகளை பயன்படுத்துவது சிறந்தது. மரங்களை சுற்றிலும் சுத்தப்படுத்தி, நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். குறிப்பாக மரத்தின் அடிப்பகுதியில் மழைநீர் தேங்காத வகையில் பாதுகாக்க வேண்டும்.

அனைத்து காய்கறி, பழம் மற்றும் மருத்துவப் பயிர்களுக்கு பதினைந்து நாட்கள் இடைவெளியில் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, பொட்டாஷ் கரைக்கும் பாக்டீரியா போன்ற உயிர் உரங்களை தவறாமல் ஏக்கருக்கு 5 கிலோ வீதம் தெளித்து, ஊட்ட மேலாண்மை மேற்கொள்வதுடன், டிரைகோடெர்மா விரிடி 4 கிராம், சூடோமோனஸ் 10 கிராம் ஆகியவைகளை 1 கிலோ தொழு உரம் அல்லது மணல் அல்லது தண்ணீரில் கலந்து தெளிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்