குமரி மாவட்டத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பு ரூ.19.50 கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டுப் பணிக்கு டெண்டர் விட்டதில் நடந்த முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகர்கோவில் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான என்.சுரேஷ்ராஜன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
குமரி மாவட்டத்தில் 13 பேரூராட்சிகளில் ரூ.19.50 கோடி மதிப்பில் சாலைப்பணிகளுக்கு தேர்தலுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டது. ரூ.2 கோடிக்கு மேல் மதிப்புள்ள பணிகளுக்கு டெண்டர் விடுவதற்கு 15 நாட்களுக்கு முன்பே நாளிதழ்களில் அறிவிப்பு வெளியிட வேண்டும். ஆனால், இந்த டெண்டர் அறிவிப்பு 6 நாட்களுக்கு முன்புதான் நாளிதழ்களில் வெளியிடப்பட்டது.
குமரி மாவட்டத்தில் அனைத்து பேரூராட்சிகளில் நடந்த டெண்டரிலும் முறைகேடுகள் நடந்துள்ளன. தேர்தலுக்கு முன்பு வெளியிடப்பட்ட டெண்டர் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இந்த முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்பு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர் புகழ்காந்தி வாதிட்டார். அரசு தரப்பில், பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து, மனுதாரரின் புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் முதல் கட்ட விசாரணை நடத்தி, அது தொடர்பாக 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago