திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் வளாகத்தில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை ஆட்சியர் கி.செந்தில் ராஜ் ஆய்வு மேற்கொண்டார். நாழிக்கிணறு பேருந்து நிலையம் பகுதியில் உள்ள கழிப்பிடத்தை புதுப்பிக்கும் பணி, மின்கம்பங்களை மாற்றியமைக்கும் பணி, வாகன நிறுத்துமிடத்தை விரிவுபடுத்தும் பணி ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயில் வளாகத்தில் ஆண், பெண் கழிப்பிடங்கள், குளியலறைகள் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பத்து பேர் ஒரே நேரத்தில் குளிக்கும் வகையில் சவர் அமைக்கப்பட்டுள்ளது. கழிப்பிடத்தில் உள்ள செப்டிக் டேங்கை பயன்படுத்தாமல் நேரடியாக பேரூராட்சி பாதாள சாக்கடைத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடைந்து பக்தர்கள் பயன்பாட்டுக்கு வரும். விழா காலங்களில் அதிகளவு பக்தர்கள் வருகின்றனர். இதனால் கோயில் வளாகத்தில் தெற்கு பகுதியில் காலியிடத்தில் வாகன நிறுத்துமிடம் விரிவுபடுத்தப்படும்.
கடற்கரை பகுதியில் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பயன்பாட்டுக்காக பேட்டரி கார் வசதி செய்யப்படும். கடற்கரையிலிருந்து நாழிக்கிணறு விரிவுபடுத்தப்பட்ட வாகன நிறுத்துமிடத்துக்கு இணைப்பு ஏற்படுத்தப்படும். இவை டிசம்பர் 10-ம் தேதிக்குள் திறந்து வைக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago