தி.மலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா நாளில் பக்தர்களை ஒதுக்கிவிட்டு விஐபிக்களை வரவேற்கும் முடிவுக்கு பக்தர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் கடந்த 7-ம் தேதியில் இருந்து கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 19-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயில் மூலவர் சன்னதியில் பரணிதீபம் ஏற்றப்படுகிறது. பின்னர், மாலை 6 மணியளவில் 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படும்.
கோயிலில் நடைபெறும் பரணி தீபம் ஏற்றுதல் மற்றும் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளும் நிகழ்வை காணும் உரிமை என்பது பக்தர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும் ‘எட்டா கனி’யாகவே உள்ளது. கரோனா தொற்றை காரணமாக தெரிவித்து, இந்தாண்டு கடும் கெடுபிடிகளை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது. வரும் 19-ம் தேதி தீபம் நடைபெற உள்ள நிலையில், கோயில் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்ய, பக்தர்களுக்கு 17-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோயில் உள்ளே செல்ல விடாமல் பக்தர்களை ஒதுக்கிவிட்டு, விவிஐபிக்கள் மற்றும் விஐபிக்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர்கள், கோயில் உள்ளே தடையின்றி எளிதாக செல்லவும், அர்த்தநாரீஸ்வரர் காட்சி தருவதற்கு முன்பாக கோயிலுக்கு வரும் விஐபிக்களை தங்க வைத்து உபசரிக்கக் கூடிய இடங்கள் உட்பட அனைத்து கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், தி.மலையில் உள்ள நட்சத்திர விடுதியில் அவர்கள் தங்குவதற்கும், பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அண்ணாமலையார் கோயிலை சென்றடைந்து திரும்பி வரும் வழித்தடங்களில் தடை இல்லாமல் இருப்பதற்கான பணிகளை காவல்துறை யினர் மேற்கொண்டுள்ளனர்.
அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களை ஒதுக்கிவிட்டு விஐபிக்களை வரவேற்கும் முடிவுக்கு பக்தர்களும் ஆன்மிகவாதிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “பக்தர்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிட்டு தீபத் திருவிழா நடத்தப்படுகிறது. அதே நேரத்தில் விஐபிக்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெறுகிறது. உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.
மக்களுக்கான அரசாங்கம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். அவர் கூறுவது உறுதி என்றால், அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவுக்கு பக்தர்களை அனுமதிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும். கரோனா தொற்று பரவல் ஏற்படும் என்ற அச்சம் முதல்வருக்கு ஏற்பட்டால், விஐபிக்கள் உட்பட யாரையும் கோயில் உள்ளே அனுமதிக்கக்கூடாது. ஆட்சியர் உள்ளிட்ட உயர்அதிகாரிகள், அவர்களது தலைமையகத்தில் இருந்தபடியே விழா பாதுகாப்பை கண்காணிக்கலாம். கோயில் உள்ளே பாதுகாப்பு தேவைப்பட்டால், காவல்துறையி னரை அனுமதிக்கலாம்” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago