கரூர் மாவட்டம் நொய்யல் ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்துக்காக தண்ணீரை மாநில மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேற்று திறந்துவைத்தார்.
இந்நிகழ்வுக்கு, ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை வகித்தார். எம்எல்ஏக்கள் அரவக்குறிச்சி பி.ஆர்.இளங்கோ, கிருஷ்ணராயபுரம் க.சிவகாமசுந்தரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர், அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தெரிவித்தது:
ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்தில் தற்போதுள்ள நீர் இருப்பு, பருவமழை மூலம் எதிர்பார்க்கப்படும் நீர்வரத்து ஆகியவற்றை கணக்கில்கொண்டு, நொய்யல் பிரதான கால்வாயில் விநாடிக்கு 75 கன அடி அளவில் தண்ணீர் பாசனத்துக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.
மேலும், நீர்வரத்துக்கு ஏற்ப நீர்திறப்பு அளவு படிப்படியாக உயர்த்தப்பட்டு, கால்வாயில் 136 கன அடி வரை தண்ணீர் விடப்படும்.
ஆத்துப்பாளையம் நீர்த்தேக்கத்தில், அதன் முழு கொள்ளளவான 235.52 மில்லியன் கன அடி நீர் உள்ளது. தற்போது, விநாடிக்கு 50 கன அடியாக நீர்வரத்து உள்ளது.
இந்த நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுவதால், கரூர் மாவட்டத்தில் அஞ்சூர், துக்காச்சி, கார்வழி, தென்னிலை, முன்னூர், அத்திப்பாளையம், குப்பம், புன்னம், வேட்டமங்கலம், புஞ்சைபுகழூர், புஞ்சைதோட்டக்குறிச்சி, ஆத்தூர், புஞ்சைகடம்பங்குறிச்சி, மண்மங்கலம், குப்புச்சிபாளையம், மின்னாம்பள்ளி, காதப்பாறை, பஞ்சமாதேவி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 19,480 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெறும் என்றார். நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறையின் கீழ்பவானி வடிநிலக் கோட்ட உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியம், உதவி பொறியாளர்கள் ப.சதீஸ்வரன், செ.குமரேசன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கார்த்தி, புகழூர் வட்டாட்சியர் மதிவாணன், க.பரமத்தி வட்டார வளர்ச்சி அலுவலர் பரமேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago