மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக திருச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அய்யாக்கண்ணுவின் வீட்டை முற்றுகையிட முயன்ற பாஜகவினரை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 46 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி அண்ணாமலை நகரில் உள்ள சங்கத்தின் மாநில அலுவலக வளாகத்தில் அக்.12-ம் தேதி தொடங்கினர்.
35-வது நாளான நேற்று நெற்றி உட்பட உடலில் பட்டையிட்டுக் கொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக அய்யாக்கண்ணு கூறும்போது, “வேளாண் விளைபொருட்களுக்கு 2 மடங்கு விலை தருவதாகக் கூறிய வாக்குறுதியை பிரதமர் மோடி நிறைவேற்றாமல், விவசாயிகளுக்கு பட்டை சாத்திவிட்டார் என்பதை உணர்த்தும் வகையில் இந்தப் போராட்டத்தை நடத்தினோம்’’ என்றார்.
முற்றுகையிட முயன்ற பாஜகவினர்
இதனிடையே, பிரதமர் மோடியை அவமதித்து வருவதாகக் கூறி, அண்ணாமலை நகரில் உள்ள விவசாய சங்க நிர்வாகி அய்யாக்கண்ணு வீட்டை முற்றுகையிடுவதற்காக மாநகர் மாவட்டத் தலைவர் எஸ்.ராஜசேகரன் தலைமையிலான பாஜகவினர் 50-க்கும் அதிகமானோர் திரண்டு வந்தனர்.கரூர் புறவழிச் சாலையில் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். அப்போது அவர்கள் சாலையின் ஓரமாக அமர்ந்து அய்யாக்கண்ணுவைக் கண்டித்து முழக்கமிட்டனர். தொடர்ந்து, போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி, பாஜகவினரை கலைந்து போகச் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago