கல்விக்கடன் வழங்காமல் அலைக்கழித்ததால் கண்ணீர் மல்க குறைதீர்வு கூட்டத்தில் மனு அளித்த மாணவிக்கு ஆட்சியரின் பெயரை உறுதிமொழி அளிப்பவராக குறிப்பிட்டு 2 நாளில் கல்விக்கடன் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர்.
வேலூர் மாவட்டம் நெட்டேரி கிராமத்தைச் சேர்ந்த மாணவி கோகிலா என்பவர் கண்கள் கலங்கியபடி மனு அளிக்க காத்திருந்தார். அவர் அளித்த மனுவில், ‘‘தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு செவிலியர் படிப்பு படித்து வருகிறேன். இரண்டு ஆண்டுகள் படிக்க பணம் கட்டி விட்டேன். மூன்றாம் ஆண்டுக்கு பணம் இல்லாமல் வங்கியில் கல்விக்கடன் கேட்டேன். அவர்கள் கொடுக்க மறுக்கிறார்கள்’’ என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மாணவி கூறும்போது, ‘‘மூன்றாம் ஆண்டுக்கு பாதி பணம் கட்டிவிட்டேன். மீதிப் பணம் கட்டினால்தான் நான் தொடர்ந்து படிக்க முடியும். 2 ஆண்டு தேர்விலும் தேர்ச்சி பெற்றுவிட்டேன். கீழ் ஆலத்தூரில் உள்ள ஒரு வங்கியில் கல்விக்கடன் கேட்டால் கொடுக்க மறுக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வழங்கிய பரிந்துரை கடிதத்தையும் ஏற்க மறுக்கிறார்கள்’’ என்றார்.
இதைக்கேட்டு, கோபமடைந்த ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் முன்னோடி வங்கி அதிகாரியை அழைத்து, ‘‘இந்த மாணவிக்கு 2 நாளில் கல்விக்கடன் கொடுத்துவிட்டு அதற்கான தகவலையும் எனக்கு தெரிவிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் பெயரை உறுதிமொழி அளிப்பராக பெயர் போட்டு கடன் வழங்க சொல்லுங்கள்’’ என்றார்.
ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர். குறைதீர்வு கூட்டத்தில் மொத்தம் 271 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியர் உத்தரவிட்டார்.இதனை தொடர்ந்து, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குழந்தைகள் தின விழாவையொட்டி மாணவிகளுக்கு ஆட்சியர் அன்புமடல் வழங்கினார். மேலும், விழிப்புணர்வு பதாகைகள், குழந்தைகள் உதவி எண் 1098 என்ற பதாகைகளை வெளியிட்டார். அப்போது, மாணவிகளிடம் பேசிய ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் ‘‘எந்த ஒரு மனிதர்களின் வெளிப்புற தோற்றத்தையும் வைத்து எடைபோடக்கூடாது. நிறைய படிக்க வேண்டும். வாய்ப்புகள் என்னென்ன இருக்கிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும். நமக்கு அம்மாதான் முதல் நண்பர். பெற்றோர் என்ன சொல்கிறார்களோ அதை கடைபிடித்து நடக்க வேண்டும்’’ என்று அறிவுரை வழங்கினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago