ஓசூர் வனக்கோட்டம் உரிகம் வனச்சரகம் பிலிகல் காப்புக்காடு காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் குடிக்க வரும் வன விலங்குகளை கண்காணித்து பாதுகாப்பாக வனப்பகுதிக்கு அனுப்பி வைக்க 3 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
ஓசூர் வனக்கோட்டத்தில் ஓசூர், கிருஷ்ணகிரி, தேன்கனிக் கோட்டை, அஞ்செட்டி, ஜவளகிரி, ராயக்கோட்டை, உரிகம் உள்ளிட்ட 7 வனச்சரகங்கள் உள்ளன. இதில், தமிழக எல்லையில் உள்ள உரிகம் வனச்சரகத்தில் தக்கட்டி, கெஸ்த்தூர், பிலிகல், மல்லஹள்ளி, மஞ்சுகொண்டப்பள்ளி, உரிகம் ஆகிய 6 காப்புக்காடுகள் உள்ளன. இதில், பிலிகல், மல்லஹள்ளி மற்றும் கெஸ்த்தூர் ஆகிய 3 காப்புக்காடுகளை ஒட்டிவாறு காவிரி ஆறு செல்கிறது.
தற்போது, காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் உரிகம் வனச்சரகத்தை ஒட்டிச் செல்லும் காவிரியாற்றில் கடந்த சில நாட்களாக விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடி வரை மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில், பிலிகல் காப்புக்காட்டை ஒட்டியபடி செல்லும் காவிரி ஆற்றில் தாகம் தணிக்க வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கிறது.
இவ்வாறு வரும் வனவிலங்குகளை வெளி ஆட்களிடமிருந்து பாதுகாத்து மீண்டும் காப்புக் காட்டுக்குள் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணிக்காக வனத்துறை சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உரிகம் வனச்சரகர் வெங்கடாசலம் கூறியதாவது:
மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயானி உத்தரவின் பேரில் காவிரி ஆற்றில் தண்ணீர் குடிக்க வரும் வனவிலங்குகளை கண்காணிக்க 3 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவிலும் வனவர், வனக்காவலர், வேட்டை தடுப்பு காவலர் உள்ளிட்ட 10 பேர் இடம் பெற்றுள்ளனர்.குழுவினர் காவிரியாற்றில் தண்ணீர் குடிக்க வரும் வன விலங்குகளை அவை தண்ணீர் பருகியதும் பாதுகாப்பாக வனப் பகுதிக்கு அனுப்ப நடவடிக்கை எடுப்பார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago