போச்சம்பள்ளி பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏரிகள் நிரம்பி கரைகள் உடைந்தன. இதனால், விவசாய விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்தது. இதையொட்டி நடந்த சீரமைப்பு பணிகளை கிருஷ்ணகிரி ஆட்சியர் ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் நாகரசம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. 3 மணி நேரத்துக்கும் மேல் கனமழை நீடித்தது. இதில், என்.தட்டக்கல் ஏரி நிரம்பி கரை உடைந்தது. இதனால், ஏரியில் இருந்து வெளியேறிய தண்ணீர் விளைநிலங்கள் வழியாக பாளேகுளி - சந்தூர் ஏரிக்கு செல்லும் கால்வாயில் கலந்தது.
இக்கால்வாய் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள சிறுபாலம் மற்றும் கால்வாய் சேதமானது. தகவல் அறிந்து அங்கு சென்ற பொதுப்பணித்துறை அலுவலர்கள் கால்வாய் சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர். மேலும், உடைந்த என்.தட்டக்கல் ஏரிக்கரை சீரமைக்கும் பணியில் அப்பகுதி விவசாயிகள் ஈடுபட்டனர்.
இதே போல, 16.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட கயம் ஏரி நிரம்பி உடைந்தது. இதையடுத்து மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து உடைப்பை தற்காலிகமாக சீர் செய்யப்பட்டது. மேலும், இடதுபுறக்கால்வாய் வழியாக 19 ஏக்கர் பரப்பளவு கொண்ட கம்புகாலப்பட்டி ஏரிக்கு தண்ணீர் செல்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழைக்கு இந்த ஏரி நிரம்பி தண்ணீர் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் சூழ்ந்தது. இதனால், கிராம மக்கள் சிரமத்துக்குள்ளாகினர்.
தொடர்ந்து நேற்று குடியிருப்புக்குள் மற்றும் வயல்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்தது.இப்பணிகளை கிருஷ்ணகிரி ஆட்சியர் ஜெயசந்திர பானு ரெட்டி, பர்கூர் எம்எல்ஏ டி.மதியழகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது,உபரிநீர் வெளியேறும் கால்வாய்களை சீரமைக்க கருத்துரு தயார் செய்ய அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கினார்.
தொடர்ந்து வாடமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் உபரிநீர் ஜடையன் கொட்டாய் மற்றும் கரியன் கொட்டாய் பகுதிகளில் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் வயல்களில் நீர் சூழ்ந்தது. நேற்று நீர் வெளியேற்றும் பணிகள் நடந்தது. இப்பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.ஆய்வின்போது, கோட்டாட்சியர் சதீஷ்குமார், வட்டாட்சியர் இளங்கோ, வட்டார வளர்ச்சி அலுவலர் அசோகன், அன்சர்பாஷா, வருவாய் ஆய்வாளர் லதா உள்ளிடோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago