சந்தூர் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையால், 25 ஆண்டுகளுக்கு பின்னர் அங்குள்ள தடுப்பணை ஓடையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர். அடுத்த படம்: கனமழை காரணமாக கெலமங்கலம் சின்னட்டி தடுப்பணை நிரம்பி தண்ணீர் வழிந்து வருகிறது.கனமழையால் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் - சந்தூர் ஓடையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் : பூஜை செய்து வழிபட்டு மக்கள் மகிழ்ச்சி

கனமழையால், 25 ஆண்டுகளுக்கு பின்னர் சந்தூர் அருகேயுள்ள தடுப்பணை ஓடையில் தண்ணீர் பெருக்கேடுத்து ஓடியது. இதை யடுத்து, அப்பகுதி மக்கள் பூஜை செய்து வழிபட்டு மகிழ்ந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு இடங்களில் இடைவிடாத கனமழை பெய்தது. மழையால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பின. காட்டாகரம் ஊராட்சிக்கு உட்பட்ட சந்தூர் பகுதிகளில் பெய்த கனமழையால், அங்குள்ள தடுப்பணை ஓடையில் 25 ஆண்டுகளுக்கு பின்னர் தண்ணீர்

பெருக்கெடுத்து ஓடியது. இங்கிருந்து கூச்சானூர் ஏரிக்கு செல்லும் தண்ணீர், அங்கிருந்து பெனுகொண்டாபுரம் ஏரி வழியாக பாம்பாறு அணைக்கு செல்கிறது.

25 ஆண்டுகளுக்கு பிறகு ஓடையில் தண்ணீர் ஓடியதால் பொதுமக்கள் பூக்கள் தூவியும், ஆடுகள் பலியிட்டும் வழிபட்டனர். மேலும், பாளேகுளி ஏரியிலிருந்து 28 ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில் கடைக்கோடி ஏரியான கூச்சானூர் ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்த ஏரிக்கு வரும் நீர்வரத்து கால்வாய்கள் பல இடங்களில் ஆக்கிரமிப்பு மற்றும் அடைப்பு காரணமாக வெப்பாலம்பட்டி, வாத்தியார் கொட்டாய், சுண்டகாப் பட்டி, சந்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் தண்ணீர் சூழ்ந்தது. இதனால், பயிர்கள் நீரில் மூழ்கின.

வயல்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் பல்வேறு இடங்களில் மழை பெய்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பெய்த மழையளவு (மில்லி மீட்டரில்) விவரம்:

தேன்கனிக்கோட்டை 99, பாரூர் 88, ஊத்தங்கரை 74, போச்சம்பள்ளி 33.60, நெடுங்கல் 38.60, பெனுகொண்டாபுரம் 27.40, கிருஷ்ணகிரி 21.80 ஓசூர் 14, தளி 15, சூளகிரி 7, அஞ்செட்டி 9.60 மிமீ மழை பதிவானது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE