பாலாற்றில் குளிக்கச்சென்ற 7 இளைஞர்கள் ஆற்று வெள்ளத்தில் சிக்கினர். சுமார் 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி அடுத்த மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த அமுதவன் (18), விஸ்வநாதன்(20), நந்தகுமார் (19), சின்ராசு(18), சுபாஷ்(20), ரமேஷ்(20), கோகுல்(20) ஆகிய 7 பேரும் புதூர் கிராமத்தில் உள்ள பாலாற்றில் நேற்று பிற்பகல் குளிக்கச்சென்றனர்.
7 பேரும் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், நீரில் தத்தளித்த 7 பேரும் கரைசேர முடியாமல் தவித்தனர். பிறகு, மெல்ல நகர்ந்து ஆற்றின் மேடானப் பகுதியில் 7 பேரும் தஞ்சமடைந்து தங்களை காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர்.
இதைக்கண்ட பொதுமக்கள், அவர்களை மீட்க முயற்சித்தனர். ஆனால், ஆற்றின் நீரின் வேகம்அதிகரித்ததால் பொதுமக்களால் ஆற்றில் இறங்க முடியவில்லை. உடனே, தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப்படையினர் 15 பேர், தீயணைப்புத்துறையினர் 10 பேர் என மொத்தம் 25 பேர் அங்கு விரைந்து வந்தனர்.
பின்னர், ரப்பர் படகு மூலம் ஆற்றில் இறங்கிய அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் சுமார் 4 மணி நேரம் போராட்டத்துக்கு பிறகு 7 இளைஞர்களையும் பத்திரமாக மீட்பு கரைக்கு அழைத்து வந்தனர்..
முன்னதாக, கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி, மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், எஸ்.பி., டாக்டர் தீபாசத்யன் மற்றும் வருவாய்த் துறையினர் அங்கு விரைந்து சென்று 7 பேரை மீட்கும் பணிகளை துரிதப்படுத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago