திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பருவமழை மற்றும் பேரிடர் காலங்களில் பயன்படும் வகையில் 56 நடமாடும் மருத்துவ வாகனங்களை, தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
அதன்பின்பு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் மழைஅதிகம் பெய்யும் பகுதிகளில் இந்த வாகனங்கள் நிறுத்தப்படும். நாளொன்றுக்கு மொத்தம் 112 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சளி மற்றும் காய்ச்சல் கண்டறிதல், காய்ச்சல் கண்டறியப்பட்டவர்களின் ரத்த மாதிரி சேகரித்தல் மற்றும் மருந்து வழங்குதல், உயர்சிகிச்சைக்கு பரிந்துரை செய்தல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்டவை இத்திட்டத்தின் நோக்கமாகும். ‘வரும் முன்காப்போம்’ திட்டம் மூலமாக, கடந்த அக்டோபர் 7-ம் தேதி முதல் தற்போது வரை திருப்பூர் மாவட்டத்தில் 10,880 பேர் பயனடைந்துள்ளனர், என்றார். இந்நிகழ்வில், திருப்பூர் மக்களவை உறுப்பினர் சுப்பராயன், மாவட்ட ஆட்சியர் சு.வினீத், வருவாய் அலுவலர் கு. சரவணமூர்த்தி, துணை இயக்குநர்(சுகாதாரப் பணிகள்) ஜெகதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
நீலகிரி மாவட்டம் உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் 20 நடமாடும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களுக்கான வாகனங்களை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். அதன்பின்பு அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘நீலகிரி மாவட்டத்தில் 20 நடமாடும்மழைக்கால சிறப்பு முகாம் வாகனங்கள் தொடங்கி வைக்கப் பட்டுள்ளன.இம்முகாமில் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் என மொத்தம் 80 பணியாளர்கள் இருப்பார்கள்,’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago