நம்பியூர் அருகே விவசாய நிலத்துக்கு சான்று வழங்க - ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது :

By செய்திப்பிரிவு

விவசாய நிலத்துக்கு மெய்த் தன்மை சான்று வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய எலத்தூர் கிராம நிர்வாக அலுவலரை ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கூடக்கரையைச் சேர்ந்தவர் விவசாயி ரத்தினசாமி (50). இவரது இரண்டரை ஏக்கர் விவசாய நிலத்துக்கு மெய்த்தன்மை சான்று கேட்டு நம்பியூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இச்சான்றிதழ் வழங்க எலத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ராம்ஜி (33) ரூ.50 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

எனினும், லஞ்சம் வழங்க மனமில்லாத ரத்தினசாமி இதுகுறித்து ஈரோடு லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் செய்தார். இதையடுத்து போலீஸார் அறிவுறுத்தலின்படி ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரத்தை இருகாலூர் ஊராட்சி அலுவலகம் அருகே வைத்து எலத்தூர் கிராம நிர்வாக அலுவலர் ராம்ஜியிடம், ரத்தனசாமி கொடுத்துள்ளார்.

அதை அவர் வாங்கியபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் ராம்ஜியை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மெய்த்தன்மை சான்று வழங்க லஞ்சம் வாங்க துணை வட்டாட்சியர் அழகேசன் கூறினார். இதற்கு முத்துக் குமார் என்பவர் இடைத்தரகராக செயல்பட்டார் எனக் கூறியுள்ளார். இதையடுத்து துணை வட்டாட்சியர் அழகேசன் மற்றும் இடைத்தரகர் முத்துகுமார் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்