கோசாலையில் உள்ள மாடுகளை மீட்கக்கோரி விழுப்புரத்தில் போராட்டம் :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் நகராட்சி 42-வது வார்டுக்குட்பட்ட பானாம்பட்டு பகுதியில் கோ சாலை உள்ளது. இங்கு நூற்றுக்கணக்கான மாடுகளை பராமரித்து வருகின்றனர். ஆனால் கடந்த சில மாதங்களாக இங்குள்ள மாடுகளை சரிவர பராமரிக்காமல் உணவின்றி பட்டினியால் மாடுகள் இறந்து வருகின்றன.

இறந்த மாடுகளை திறந்தவெளியில் வீசிவிட்டு செல்வதால் துர்நாற்றம் ஏற்படுகிறது. நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இங்குள்ள சுமார் ஒரு ஏக்கர் நிலத்தில் 500-க்கும் மேற்பட்ட மாடுகளை அடைத்து வைத்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து மாடுகளை மீட்கக்கோரி அப்பகுதி மக்கள், நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டனர். இருப்பினும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது. இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், கோ சாலைக்கு சென்று அதனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் ஆட்சியரிடம் மனு அளிக்குமாறு அறிவுறுத்தினர். போராட்டத்தை கைவிட்டு பின்னர் அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்