தொழில் முனைவோருக்கு ரூ.15.45 கோடி மானியத்துடன் கடனுதவி வழங்க நடவடிக்கை : சேலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் மூலம் ரூ.75 லட்சத்திற்கு மிகாமல் 25 சதவீதம் முதலீட்டு மானியமும், 3 சதவீதம் வட்டி தள்ளுபடி மானியத்துடன் கூடிய கடனும் பெற மாவட்ட தொழில் மையத்தின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் கடனுதவி பெற www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதளத்தில் கட்டணம் ஏதுமின்றி விண்ணப்பிக்கலாம்.

சேலம் மாவட்டத்தில் 2021-2022-ம் நிதியாண்டில் தொழில் முனைவோருக்கான பல்வேறு திட்டங்களின் மூலம் ரூ.15.45 கோடி மானிய கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சேலம் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் ரூ.9.35 கோடி மானியம் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, இதுவரை 40 நபர்களுக்கு ரூ.2.22 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் திட்ட முதலீடானது உற்பத்தி தொழிலுக்கு அதிகபட்சமாக ரூ.15 லட்சத்திற்குள்ளும், சேவை தொழில் மற்றும் வியாபாரத் தொழிலுக்கு அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரையிலும், மேலும் இவை அனைத்திற்கும் 25 சதவீதம் மானிய வீதம் அதிகபட்ச மானியத் தொகையாக ரூ.2.50 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்துக்கு 2021-2022-ம் நிதியாண்டில் சேலம் மாவட்ட தொழில் மையத்திற்கு ரூ.3.60 கோடி மானியம் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, இதுவரை 53 நபர்களுக்கு ரூ.77.96 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் திட்ட முதலீடானது உற்பத்தி தொழிலுக்கு அதிகபட்சமாக ரூ.25 லட்சத்திற்குள்ளும் (கல்வி தகுதி 8-ம் வகுப்பிற்கு கீழ் ரூ.10 லட்சம் வரையிலும்), சேவை தொழிலுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சத்திற்குள்ளும் (கல்வி தகுதி 8-ம் வகுப்பிற்கு கீழ் ரூ.5 லட்சம் வரையிலும்) மேலும் இவை அனைத்திற்கும் திட்ட மதிப்பீட்டில் கிராமபுரத்திற்கு 25 சதவீதம் மானியமும், நகர் புறத்திற்கு 35 சதவீதம் மானியமும் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், பி.எம்.இ.ஜி.பி திட்டத்தின் கீழ் கடனுதவி பெற்று வெற்றிகரமாக தொழில் நடத்துவோர்கள், விரிவாக்கம் செய்வதற்கும் கடன் உதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் 2021-2022-ம் நிதியாண்டில் மாவட்ட தொழில் மையத்திற்கு ரூ.2.50 கோடி மானியம் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, இதுவரை 60 நபர்களுக்கு ரூ.2.17 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற www.kviconline.gov.in என்ற இணையதளத்தில் இலவசமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு சேலம் குரங்குச்சாவடியில் உள்ள மாவட்ட தொழில் மைய அலுவலகத்தை நேரிலோ அல்லது 0427 - 2447878 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம், என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்