பாலாறு, செய்யாறில் வெள்ள அபாய எச்சரிக்கை :

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டம் பாலாறு மற்றும் செய்யாற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து காஞ்சி மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையின் விவரம்:

கடந்த 2 நாட்களாக பாலாறு மற்றும் செய்யாறு வடிநில பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேற்புறம் உள்ள அணைகள் மற்றும் ஏரிகள் நிரம்பியுள்ளன. இதனால் உபரிநீர் இந்த ஆறுகளில் திருப்பி விடப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் அணைக்கட்டில் இருந்து சுமார் 12,301 வெள்ள உபரிநிர் பாலாற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர்ந்து 30 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற வாய்ப்பு உள்ளது.

அதேபோல் திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில்சுமார் 10,153 கன அடி உபரிநீர் திறந்து விடப்படுகிறது. இதனால் இவ்விரு ஆறுகளில் அதிக நீர் செல்லும் என்பதால் இந்த ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிகை விடப்படுகிறது.

பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்கவோ, ஆற்றைக் கடக்கவோ, ஆற்றில் குளிக்கவோ, துணி துவைக்கவோ இறங்க வேண்டாம். கால்நடைகளை ஆற்றுக்குச் செல்லாமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் உள்ள சிறுவர், சிறுமியரை ஆற்றின் அருகில் செல்லாமல் இருக்க பெற்றோர் விழிப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்