பூண்டி ஏரி உபரிநீர் திறப்பு - 18 ஆயிரம் கன அடியாக உயர்வு : 100 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு

By செய்திப்பிரிவு

கன மழையால் ஆந்திரம், தமிழக பகுதிகளில் இருந்து பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால் ஏரியின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மாதம் 10-ம் தேதி முதல் உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர்வரத்தின் அளவை பொறுத்து உபரிநீர் திறப்பு அவ்வப்போது அதிகரிக்கப்பட்டும் குறைக்கப்பட்டும் வந்தது.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பூண்டி ஏரிக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. ஆகவே, பூண்டி ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து, காலை 9.30 மணியளவில் விநாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக அளவு அதிகரிக்கப்பட்டது.

பிறகு, காலை 11 மணியளவில் நீர்வரத்து விநாடிக்கு 21 ஆயிரம் கன அடியாக உயர்ந்ததால், வெளியேற்றப்படும் நீரின் அளவை நீர்வளத் துறை அதிகாரிகள் விநாடிக்கு 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்தனர்.

இதனால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த தண்ணீர் திரு வள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில் உள்ள ஒதப்பை தரைப்பாலத்தை மூழ்கடித்து செல்கிறது. வெள்ள நீர், பாலத்தின் மேலே ஒரு அடி உயரத்துக்கு செல்கிறது.

ஆகவே, ஒதப்பை பகுதியில் போலீஸார் போக்குவரத்தை தடை செய்துள்ளனர். இதன் காரணமாக, திருவள்ளூரிலிருந்து, ஊத்துக்கோட்டைக்கு செல்லும் வாகனங்கள், தாமரைப்பாக்கம், வெங்கல், சீத்தஞ்சேரி உள்ளிட்ட பகுதி வழியாக கூடுதலாக சுமார் 25 கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

அதுமட்டுமல்லாமல், வெள்ளப்பெருக்கு காரணமாக பூண்டி, ஒதப்பையைச் சுற்றியுள்ள நம்பாக்கம், ஆட்ரம்பாக்கம், மைலாப்பூர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்