திருப்பத்தூர் அருகே இளைஞர்கள் முயற்சியால் வரத்துக் கால்வாய் தூர்வாரப்பட்டு 50 ஆண்டுகளுக்கு பிறகு ஊருணிக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது.
திருப்பத்தூர் அருகே கீழப்பட்டமங்கலம் ஊராட்சி வெளியாரி கிராமம் ஒத்தவளவு பகுதியில் உள்ள கருப்பையா கோயில் செங்கபள்ளம்ஊருணி தூர்வாரப்படாததால் கடந்த 50 ஆண்டுகளாக வறண்டு காணப்பட்டது. கிராம மக்களின் தொடர் வலியுறுத்தலை அடுத்து குடிமராமத்து திட்டத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் ஊருணி தூர்வாரப்பட்டது. ஆனால் வரத்துக் கால்வாய் தூர்வாரவில்லை. அப்பகுதியில் தற்போது மழை பெய்தபோதும் ஊருணிக்கு தண்ணீர் வரவில்லை.
மேலும் அவ்வழியாக செல்லும் மணிமுத்தாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வர இளைஞர்கள் தங்கள் சொந்த செலவில் முயற்சி எடுத்தனர். அவர்களை ஊராட்சித் தலைவர் பிரமிளா கார்த்திகேயன், ஊர் அம்பலம் சண்முகநாதன் ஆகியோர் வழி நடத்தினர்.
இதனால் நேற்று ஒரே நாளில் 2 கி.மீ. தூரத்துக்கு வரத்துக் கால்வாய் தூர்வாரப்பட்டு தண்ணீர் கொண்டு வரப்பட்டது. 50 ஆண்டுகளுக்கு பிறகு ஊரு ணிக்கு தண்ணீர் வந்ததால் இளைஞர்களை கிராம மக்கள் பாராட்டினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago