தமிழகம், புதுச்சேரியில் - 20 இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட 10 பேர் கைது : நாமக்கல் தனிப்படை போலீஸார் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் 20 இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் மற்றும் அவர்களுக்கு உதவிய 7 பேரை நாமக்கல் போலீஸார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் கீதா (47). இவர் சாலையில் நடந்து சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையைப் பறித்துச் சென்றனர். கடந்த மாதம் 29-ம் தேதி இந்த சம்பவம் நடந்த நிலையில், அடுத்த நாள் நாமக்கல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், சரோஜா (59) என்பவரிடம் இருந்து இதே பாணியில் 8 பவுன் நகை திருடப்பட்டது.

வழிப்பறி சம்பவங்கள் தொடர்பாக நாமக்கல் டிஎஸ்பிக்கள் சுரேஷ், முத்துகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர்கள் சசிகுமார், வேலுதேவன், சந்திரகுமார், பாண்டியன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடனும், கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடிப்படையிலும் விசாரணை நடந்தது.

இதில், சென்னை ஜாபர்கான் பேட்டைச் சேர்ந்த தினேஷ்குமார் (31), சென்னை ஈக்காட்டுத் தாங்கல் பகுதியைச் சேர்ந்த சசிகுமார் (23), மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த கருப்புசாமி (22) ஆகியோரைக் கைது செய்தனர். மேலும், இவர்களுக்கு உதவியாக இருந்த அருள், செல்வம், முருகேசன், மணி, சதீஷ், செல்லம்மாள் மற்றும் மதுரைவீரன் ஆகிய 7 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 50 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து தனிப்படை போலீஸார் கூறியதாவது:

வழிப்பறி வழக்கில் கைதான தினேஷ்குமார், கருப்புசாமி, சசிகுமார் ஆகிய மூவரும் புழல் சிறையில் நண்பர்களாகி உள்ளனர். சிறையில் இருந்து வெளியே வந்ததும், சென்னையில் ஒரு இரு சக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு, கடந்த ஜூலை மாதம் முதல் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த கும்பல் சென்னையில் புறப்பட்டு சிதம்பரம், புதுச்சேரி, காரைக்கால், மயிலாடுதுறை, தஞ்சாவூர், விழுப்புரம், திண்டிவனம், அரூர், கும்பகோணம், உளுந்தூர்பேட்டை, ஆத்தூர், சின்னசேலம், செஞ்சி, திருவண்ணாமலை, தண்டாரம்பேட்டை, வாலாஜா, ராணிப்பேட்டை, பள்ளிப்பாளையம், கரூர், நாமக்கல் மற்றும் வேட்டுவளம் ஆகிய 20 இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.

வழிப்பறியின் மூலம் கிடைத்த நகைகளை காரைக்காலைச் சேர்ந்த முருகேசன், செல்வம் மற்றும திருவாரூரைச் சேர்ந்த சதீஷ் ஆகியோரிடம் கொடுத்து வந்துள்ளனர். இதுதொடர்பாக மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்