அடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவியர் தொடர்ந்து பள்ளிக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் : ஆசிரியர்களுக்கு நாமக்கல் ஆட்சியர் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

பள்ளிக்கு அடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவியர், தொடர்ந்து பள்ளிக்கு வர முயற்சி எடுக்க வேண்டுமென ஆசிரியர்களுக்கு நாமக்கல் ஆட்சியர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தினார்.

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், மாணவியரின் வருகைப் பதிவேட்டை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து வகுப்பறைக்குச் சென்ற அவர், சமூக இடைவெளியுடன், அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி பாடங்களை நடத்த வேண்டுமென அறிவுறுத்தினார்.

மேலும், பள்ளிக்கு அடிக்கடி விடுப்பு எடுக்கும் மாணவிகளின் விவரங்களை கேட்டறிந்த ஆட்சியர், பள்ளியில் பயிலும் அனைத்து மாணவியர்களும் உயர்கல்வி பயில உரிய பங்களிப்பை வழங்க வேண்டுமென ஆசிரியர்களைக் கேட்டுக் கொண்டார்.

மேலும், பள்ளிக்கு வராத மாணவிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று, அவர்களின் பெற்றோரிடம் உயர்கல்வியின் முக்கியத்துவத்தையும், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது குறித்தும், கல்லூரி மற்றும் விடுதிக் கட்டணம் அனைத்தையும் அரசே ஏற்றுக்கொண்டுள்ளதையும் தெரிவிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அவர் அறிவுறுத்தினார். அங்குள்ள சத்துணவு கூடத்தில் சமைக்கப்பட்ட உணவைச் சாப்பிட்டு அதன் தரத்தை ஆட்சியர் ஸ்ரேயா சிங் சோதனை செய்தார்.

முன்னதாக, புதுக்கோட்டை கிராமத்தில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதைப் பார்வையிட்ட ஆட்சியர், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்றார். நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மஞ்சுளா, மாவட்ட கல்வி அலுவலர் ராமன் உள்ளிட்டோர் ஆய்வில் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்