பவானிசாகர் அணையில் இருந்து - பவானி ஆற்றில் உபரிநீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தம் :

By செய்திப்பிரிவு

பவானிசாகர் அணைக்கு கடந்த இரு நாட்களாக நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், நேற்று முதல் நீர்வரத்து விநாடிக்கு 3819 கனஅடியாக அதிகரித்துள்ளது. பவானி ஆற்றில் உபரி நீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் 105 அடி வரை, 32.8 டிஎம்சி நீரினைத் தேக்கி வைக்க முடியும்.

அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியாக உள்ள நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர்மின் உற்பத்தி அணைகள், பருவமழை அதிகரிப்பால் நிறையும் போது, பவானிசாகர் அணைக்கு ஒரே நேரத்தில் அதிக நீர் வரத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, 103 அடி வரை மட்டுமே தற்போது நீர் தேக்கப்படுகிறது.

கடந்த இரு நாட்களாக நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைவால், பவானிசாகர் அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 2000 கனஅடிக்கு கீழ் குறைந்தது. இந்நிலையில் நேற்று நீர் வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி, பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 103.04 அடியாகவும், நீர்வரத்து விநாடிக்கு 3819 கனஅடியாகவும் இருந்தது. அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசனத்துக்கு விநாடிக்கு 300 கனஅடி நீரும், கீழ்பவானி பாசனத்துக்கு 1500 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது. இருப்பினும், பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்