தஞ்சாவூர் வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனைரத்து செய்யக்கோரி போலீஸார் தாக்கல் செய்த மனுவுக்கு சாட்டை துரைமுருகன் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குமரி மாவட்டம் தக்கலையில் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி யூ டியூப்பர் சாட்டை துரைமுருகனை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு துரைமுருகன் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி கே.முரளிசங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு கருத்துகளை பதிவிட்டது தொடர்பாக மனுதாரர் மீது தஞ்சாவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கில் மனுதாரருக்கு உயர் நீதிமன்றம்நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அந்த நிபந்தனையை மீறி தொடர்ந்து அதேபோன்ற குற்றத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஜாமீன் வழங்கக்கூடாது என்றார். இதையடுத்து ஜாமீன் மனு விசாரணையை நவ. 16-க்கு நீதிபதிஒத்திவைத்தார்.
இதனிடையே, சமூக வலைதளங்களில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, நடிகை குஷ்பு ஆகியோர் குறித்து அவதூறு பதிவுகளை பதிவேற்றம் செய்த வழக்கில் துரைமுருகனுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் போலீஸ் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில் மனுதாரருக்கு ஜாமீன் வழங்கும் போது, யாரையும் புண்படுத்தி வீடியோ வெளியிடவோ, பதிவேற்றம் செய்யவோ கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டது. இந்த நிபந்தனையை மனுதாரர் மீறியுள்ளார். இதனால்அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி பி.புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. மனு தொடர்பாக பதிலளிக்க துரைமுருகனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை நவ. 19-க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago