ஏரல் அரசு மகளிர் பள்ளி கட்டிடங்கள் கடும் சேதம் : சிறுதொண்டநல்லூர் பள்ளிக்கு மாறும் வகுப்புகள்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில்உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கட்டிடம் சேதமடைந்துள்ளதால், வகுப்புகளை தற்காலிகமாக அருகேயுள்ள சிறுதொண்டநல்லூர் அரசு பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏரலில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 645 மாணவியர் பயின்று வருகின்றனர். இந்தபள்ளிக் கட்டிடம் மிகவும் சேதமடைந்து உருக்குலைந்த நிலையில் காணப்படுகிறது. தற்போது பருவமழை தீவிரமாக பெய்து வரும்நிலையில், கட்டிடங்கள் மோசமானநிலையில் இருப்பதால் வகுப்புகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான வகுப்பறைகள் சேதமடைந்த நிலையில் இருப்பதால், 10 மற்றும் 12-ம் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. எனவே, இந்த பள்ளியின் அனைத்துவகுப்புகளையும் அருகேயுள்ள சிறுதொண்டநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்ற கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சிறுதொண்டநல்லூர் பள்ளியில் தனியாக உள்ள ஒரு கட்டிடத்தில் ஏரல் பள்ளி வகுப்புகளை நடத்ததிட்டமிடப்பட்டுள்ளது. சேதமடைந்த ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கட்டிடங்களை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ்,வைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

சிறப்பு பேருந்துகள்

பின்னர் ஆட்சியர் கூறும்போது, “ஏரல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கட்டிடத்தில் உள்ள சுமார் 11 வகுப்பறைகள் பழுதடைந்துள்ளன. மாணவியரின் பாதுகாப்பு கருதி பழுதடைந்துள்ள கட்டிடங்களை இடித்துவிட்டு, புது கட்டிடங்கள் கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், இப்பள்ளி கட்டிடம் புதிதாக கட்டும் வரை மாற்று இடமாகசிறுதொண்டநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் வகுப்புகள் செயல்படுவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வகுப்புகள் சிறுதொண்டநல்லூருக்கு மாற்றப்படும்போது மாணவியர் ஏரலில் இருந்து சிறுதொண்டநல்லூரில் உள்ள பள்ளிக்கு சென்று வருவதற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார் ஆட்சியர்.

ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, ஏரல் வட்டாட்சியர் கண்ணன் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்