திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணையில் இருந்து 9 மதகுகள் வழியாக விநாடிக்கு 820 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
வட கிழக்கு பருவ மழை காரணமாக தென்பெண்ணையாறு நீர்பிடிப்புப் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால்,திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கு விநாடிக்கு 2,926 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து, 9 மதகுகள் வழியாக தென்பெண்ணையாற்றில் விநாடிக்கு 820 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சாத்தனூர் அணையில் உள்ள 20 மதகுகளின் கதவுகள் (ஷட்டர்) மாற்றும் பணிக்காக, முழு கொள்ளளவான 119 அடி வரை தண்ணீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. இதனால் அணையில் கடந்த சில வாரங்களாக 97.45 அடியாக பராமரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அணையின் நீர்மட்டம் 99 அடியாக நேற்று உயர்த்தப்பட்டுள்ளது. அணையில் 3,609 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. சாத்தனூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால், தென்பெண்ணையாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், தி.மலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய 4 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணையாறு கரையோர கிராமங்களில் வசிக்கும் மக்களை, பாதுகாப்பாக இருக்கு மாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆற்றில் இறங்கி குளிக்கவோ, துணி துவைக்கவோ மற்றும் கால்நடைகளை குளிக்க வைக்கவோ கூடாது என பொதுப்பணித் துறையினர் எச்சரித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago