மானாமதுரை அருகே கண்மாய் கலுங்கு உடைந்ததால் வெளியேறும் தண்ணீர் : உடைப்பை சரிசெய்ய முடியாமல் தவிக்கும் கிராம மக்கள்

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கண்மாய் கலுங்கு உடைந்ததால் தண்ணீர் வெளியேறி வருகிறது. அதிகாரிகள் வராத நிலையில் கிராம மக்கள் உடைப்பை சரிசெய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

மானாமதுரை அருகே சன்னதி புதுக்குளம் கிராமத்தில் உள்ள படைக்குளம் கண்மாய் மூலம் 300 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. கடந்த சில வாரங்களாக அப்பகுதி யில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் படைக்குளம் கண்மாய் முழுவதும் நீர் நிரம்பி கலுங்கு வழியாக உபரிநீர் வெளி யேறி வருகிறது.

இந்நிலையில் சில தினங் களுக்கு முன்பு கலுங்கு கட்டுமான பகுதி சேதமடைந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.

இதனால் உபரிநீர் செல்லும் பகுதியில் உள்ள 250 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து கிராம மக்களே நேற்று சேதமடைந்த கலுங்கு பகுதியை கற்களைக் கொண்டு சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இருந்தபோதிலும் தண்ணீரின் வேகம் அதிகமாக இருப்பதால் உடைப்பை சரிசெய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து சன்னதி புதுக்குளம் கிராம மக்கள் கூறியதாவது: எங்கள் கண்மாய் 15 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பியது. தற்போது அதன் உபரி நீர் செய்யலூர் கண்மாய்க்கு செல்கிறது. ஆனால் கலுங்கு பகுதி பல ஆண்டுகளாக பராமரிக்காததால், உபரிநீர் வெளியேறியதில் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. இன்னும் ஒரு மழை பெய்தால் கூட முழுமையாக உடைந்துவிடும்.

இதனால் அப்பகுதியில் உள்ள 250 ஏக்கர் நிலங்கள் மூழ்கும் அபாயம் உள்ளது. மேலும் கண்மாய் நீர் வெளியேறினால், அதன் பாசன நிலங்களுக்கு தண்ணீர் இல்லாமல் போய்விடும். அதிகாரிகள் வராத நிலையில் நாங்களே உடைப்பை சரிசெய் கிறோம், என்று கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்