வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வனப்பகுதிகளில் உள்ள தடுப்பணைகள், நீரோடைகளில் நீர்வரத்து தடையில்லாமல் இருக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட வன அலுவலர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் சேர்வராயன் மேற்கு, தெற்கு, ஏற்காடு, மேட்டூர், ஆத்தூர், வாழப்பாடி உள்ளிட்ட 9 வனச்சரகங்கள் உள்ளன. இவற்றில் சேர்வராயன் மலை, கல்வராயன் மலை, பாலமலை உள்ளிட்ட மலைப்பகுதிகள் அடர் வனப்பகுதிகள் அடங்கியுள்ளன.
இந்நிலையில், முடிவுற்ற தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் சேலம் மாவட்டத்தில் சராசரிக்கும் கூடுதலாக மழை பெய்தது. தற்போது, நீடிக்கும் வட கிழக்குப் பருவமழைக் காலத்திலும் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் அவ்வப்போது கனமழை, தொடர்ந்து பெய்து வருகிறது.
மாவட்டத்தில் பெத்தநாயக்கன்பாளையம், குப்பனூர் உள்ளிட்ட இடங்களில் மேகவெடிப்பு காரணமாக, அதிகன மழை பெய்தது. தொடர் மழை காரணமாக, சேர்வராயன் மலையில் ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு, ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டன. தற்போது, மண் சரிவு பாதை சீரமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வடகிழக்குப் பருவமழையினால் மாவட்டத்தின் வனப்பகுதிகளில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வனத்துறை சார்பில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறியதாவது:
சேலம் மாவட்ட வனப்பகுதிகளில் மண் சரிவு ஏற்படும் ஆபத்து ஏதுமில்லை. வனப்பகுதிகளில் அடர்த்தியான மரங்கள், புதர்ச்செடிகள் உள்ளதால், நீர் அரிப்பு ஏற்படாது. வனப்பகுதியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய தடுப்பணைகள் உள்ளன.
இவற்றின் நீர்வரத்துப் பகுதிகள், நீர் வழிந்தோடும் ஓடைகள், தடுப்பணைகள் ஆகியவற்றில் கற்கள், மரக்கிளைகள், மண் ஆகியவற்றால் நீரோட்டம் தடைபடாத வகையில் இருக்க கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காப்புக் காடுகளின் நடுவே உள்ள வன கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு, மழையால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டு, அவர்களுக்குத் தேவையான டார்ச் லைட், போர்வை உள்ளிட்ட சில அத்தியாவசியப் பொருட்கள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வனத்துறையின் சூழல் சுற்றுலாத் தலங்களில் மழைக்காலம் முடியும் வரை பார்வையாளர்களுக்கு அனுமதியில்லை. மேலும், அந்த இடங்களில் புதிய கட்டுமானப் பணிகள், விரிவாக்கப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago