குளங்கள் நிரம்பி உபரிநீர் வெளியேறுவதால் கருங்குளம் அருகே - சின்னார்குளம் கிராமத்தில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது : பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் நிவாரண முகாமில் தங்க வைப்பு

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகேயுள்ள சின்னார்குளம் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. பொதுமக்கள் அங்கிருந்த பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாளில் இருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் நேற்று முன்தினம் பகலில் மழை பெய்யவில்லை.

விடிய விடிய மழை

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் சாத்தான்குளம், குலசேகரன்பட்டினம், வைகுண்டம், கயத்தாறு, கழுகுமலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. நள்ளிரவு 12 மணியளவில் தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது.

இதனால் தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேறியது. சாத்தனேரி குளம் நிரம்பியதால் வெளியேறிய உபரிநீர் அருகேயுள்ள சின்னார்குளம் கிராமத்துக்குள் புகுந்தது. 50-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழந்தது.

வீடுகளை சுற்றி இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கியதால் மக்கள் வெளியே வர முடியாமல் திணறினர். மேலும், வீடுகளுக்கு முன்பு நிறுத்தியிருந்த சைக்கிள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் நீரில் மூழ்கின.

50 பேர் மீட்பு

இதுகுறித்து தகவல் அறிந்ததும் வருவாய் துறையினர் சின்னார்குளம் கிராமத்துக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட 10 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 50 பேரை மீட்டு அந்த பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. வீடுகளை சூழந்துள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகிறது. அப்பகுதியை வைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினர் ஊர்வசி எஸ்.அமிர்தராஜ், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் கோமதி ராஜேந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர். மேலும், நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகளை வழங்கினர்.

ராமானுஜம் புதூரில் அரசு மேல்நிலைப் பள்ளி புதிய கட்டிடத்துக்கு செல்லும் பாதை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த கட்டிடத்தில் வகுப்புகள் நேற்று நடைபெறவில்லை.

மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்): திருச்செந்தூர் 5, காயல்பட்டினம் 6, குலேசகரன்பட்டினம் 26, கோவில்பட்டி 5, கழுகுமலை 20, கயத்தாறு 59, மணியாச்சி 4, எட்டயபுரம் 6.2, சாத்தான்குளம் 46.6, வைகுண்டம் 15, தூத்துக்குடி 1 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்