வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் - நீலகிரியில் 42 மண்டல குழுவினரும் தயாராக இருக்க வேண்டும் : மாவட்ட கண்காணிப்பு அலுவலர் உத்தரவு

By செய்திப்பிரிவு

வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுப்ரியா சாஹூ தலைமை வகித்து பேசியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறு துறைகள் இணைந்து பணியாற்றும் வகையில் 24 மணி நேரமும் 42 மண்டல குழுவினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மழைக்காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களாக மாவட்டம் முழுவதும் 283 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. அதில் 22 இடங்கள் கனமழையால் தொடர் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. பேரிடர் காலங்களில் பொதுமக்களை தங்கவைக்கும் வகையில் 456 முகாம்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

குன்னூர், கோத்தகிரி மற்றும் குந்தா ஆகிய வட்டங்களில் மரங்கள் விழக்கூடிய வாய்ப்பு மற்றும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால், பொக்லைன் வாகனங்கள், மணல் மூட்டைகளை மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சுகாதாரத் துறையினர், ஆம்புலன்ஸ் வசதி, மருத்துவக் குழுவினர், மருந்து இருப்பு போன்ற மருத்துவ உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மாவட்டத்தில் மொத்தமுள்ள 15 அணைகளும் சுமார் 70 சதவீதம் நிரம்பியுள்ளன. கனமழையால் அணையில் நீர் திறக்கும்பட்சத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு அறிவிப்பு செய்ய வேண்டும்.

அவசர உதவிக்கான கட்டணமில்லா தொலைபேசி எண் 1077-ல் மாவட்ட அவசர கால மையத்தில், பொதுமக்கள் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளும் வகையில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மாவட்டத்தில் பருவகாலங்களில் ஏற்படும் புயல், மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை இன்னல்களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான தகவல்கள் மற்றும் உதவிகளுக்கு ‘NeedD’ மற்றும் ‘TNSMART’ என்ற செயிலிகளை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்