திருப்பூர் சிக்கண்ணா அரசுக்கல்லூரி இடத்தில் - விளையாட்டு மைதானம் அமைக்க எதிர்ப்பு : திட்டத்தை கைவிட வேண்டுமென முன்னாள் மாணவர்கள் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

திருப்பூர் சிக்கண்ணா அரசுக் கல்லூரி இடத்தில் விளையாட்டு மைதானம் அமைக்கக் கூடாது என வலியுறுத்தி, முதல்வருக்கு மனு அனுப்ப முன்னாள் மாணவர்கள் முடிவு செய்துள்ளனர்.

திருப்பூர் கல்லூரி சாலை சிக்கண்ணா அரசுக் கல்லூரி பின்புறம் 11 ஏக்கர் இடத்தில், சர்வதேச தரத்திலான விளையாட்டு மைதானம் அமைக்கும் பணியை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக ரூ.19 கோடிக்கு கருத்துரு தயாரிக்கப்பட்டு, முதல்கட்டமாக, ரூ. 9 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மைதானத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்கும் பணி சமீபத்தில் தொடங்கியது.

அடுத்தாண்டு மே 31-ம் தேதிக்குள் செயற்கை ஓடுதளம், கேலரி, வாலிபால், டேபிள் டென்னிஸ், கூடைப்பந்து, ஹாக்கி மைதானம், ஹேண்ட்பால், கபடி உள்ளிட்ட மைதானங்கள் அமைக்கப்பட உள்ளன.

கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகம் மற்றும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஒப்புதல் பெற்றபின்பே பணிகள் தொடங்கியுள்ளதாக, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் பணிக்கான ஒப்புதல் முறையாக வந்து சேரவில்லை. கல்லூரி இடத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க அனுமதி தரக்கூடாது. எதிர்காலத்தில் கூடுதல் பாடப்பிரிவு தொடங்கும்போது இடநெருக்கடி ஏற்படும் என முன்னாள் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் மாணவர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் மாணவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், கல்லூரியில் உள்ள குமரன் அரங்கில் நடந்தது. முன்னாள் மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, முதல்வரின் தனிப்பிரிவுக்கும், செய்தித்துறை அமைச்சருக்கும் மனு அனுப்பவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில், 300-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் பங்கேற்றனர்.

முதல்வருக்கு எம்.பி. கடிதம்

இதுதொடர்பாக கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

கல்லூரிக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தை விளையாட்டுத் துறை உத்தரவாதம் எதுவும் இல்லாமலேயே உள் விளையாட்டரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேற்படி விளையாட்டரங்கில் கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு கல்லூரி வளாகத்தில் பொருட்காட்சி அமைக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி கொடுத்ததை எதிர்த்து, நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இதில் கல்வி சார்ந்த பணிகளைத்தவிர வேறு பணிகளுக்கு அனுமதி அளிக்கவோ பணிகள் செய்யவோ கூடாது என தீர்ப்பு பெறப்பட்டுள்ளது. இச்சூழலில் விளையாட்டரங்குக்கு ஒப்பந்தம் பெற்றுள்ள ஒப்பந்ததாரர், மாணவர்களின் எதிர்ப்பையும் மீறி அவசர கதியில் கட்டுமானப் பணிகளை தொடங்க முயற்சிக்கிறார். முறைகேடாக சட்டவிரோதமாக கல்லூரிக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியை தடுக்க வேண்டும். அதேபோல, தொடர் கோரிக்கையை ஏற்று கோவை-பழநி பயணிகள் ரயில் சேவை தொடங்குவதை வரவேற்கிறோம். ஆனால் பயண கட்டணத்தை ரூ.10-ல் இருந்து, ரூ. 30 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, கண்டித்தக்கது. கட்டண உயர்வை ரயில்வே நிர்வாகம் திரும்பப்பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்