பவானி ஆற்றின் நீரினைக் கொண்டு குளம் குட்டைகளை நிரப்பும் அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை (நிலை 2) செயல்டுத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் சார்பில், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குளங்கள், குட்டைகள், ஏரிகள் மழை காலங்களிலும் வறண்ட நிலையிலேயே கடந்த 60 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் 1200 அடிகளுக்கும் கீழ் சென்றுவிட்டது. இப்பகுதி மக்களும் விவசாயிகளும் பவானிசாகர் அணை அருகில் இருந்தும் தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.
இப்பிரச்சினைக்குத் தீர்வு காண கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள 15 ஊராட்சிப் பகுதிகளில், சிறுமுகை காவிலிபாளையம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக, அந்தந்த ஊராட்சி கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.
முந்தைய அதிமுக அரசு இந்த திட்டத்தை, அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிலை - 2 எனும் பெயரிலேயே நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தனர். அதன்படி, இத்திட்டம் குறித்த அறிக்கையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தயாரித்து அரசுக்கு அளித்துள்ளனர்.
சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, முதல்வர் ஸ்டாலினிடமும் இது தொடர்பாக மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த திட்டத்தை உடனடியாக செயல்படுத்திக் கொடுத்து, பவானி ஆறு மற்றும் பவானிசாகர் அணையை ஒட்டியுள்ள கிராம மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக முதல்வரை நேரடியாகச் சந்தித்து முறையிடவுள்ளதாக இப்பகுதி விவசாய அமைப்பினர் மற்றும் பொது நல அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago