குருவன்மேடு, ரெட்டிப்பாளையம் தரைப்பாலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள மக்கள் அவதி அடைந்துள்ளனர்.
செங்கல்பட்டு அருகே குருவன்மேடு, வேண்பாக்கம், வடக்குப்பட்டு, ரெட்டிபாளையம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அனைத்து தேவைக்கும், செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில், மறைமலைநகர், சென்னைஉள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இங்கு, குருவன்மேடு மற்றும் ரெட்டிப்பாளையம் பகுதிகளில் 2 தரைப்பாலங்கள் உள்ளன. சில நாட்களாக பெய்த கனமழையால், தென்னேரி ஏரி நிரம்பியுள்ளது. தற்போது அந்த ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறுகிறது.
கடந்த, 4 நாட்களாக, குருவன்மேடு, ரெட்டிபாளையம் ஆகிய இரு தரைப்பாலங்களை வெள்ளம் மூழ்கடித்து பாய்ந்தோடுகிறது. இதனால், செங்கல்பட்டிலிருந்து குருவன்மேடு வரும் அரசு நகரப் பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குருவன்மேட்டிலிருந்து செங்கல்பட்டு, சிங்கப்பெருமாள் கோயில் ஆகிய பகுதிகளுக்கு வரும் பள்ளி மாணவர்களும், வேலைக்குச் செல்லும் கிராமவாசிகளும் அவதிப்படுகின்றனர். மேலும் தரைப்பாலத்தில் அபாயகரமாக ஓடும் வெள்ளநீரின் ஆபத்தை உணராமல் சிலர் குளித்தும் துணிகளை துவைத்தும் வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் மழையின்போதும் இந்த சாலை மழைநீரால் துண்டிக்கப்படுகிறது. தற்காலிகமாக தரைப்பாலம் அமைக்கப்பட்டு இருந்தாலும் அதைத் தாண்டி மழைநீர் செல்கிறது. தற்போது மழை நீரால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால் 15 முதல் 30 கி.மீ. தூரத்தில் உள்ள ஒரகடம் பாலூர் போன்ற பகுதிகளுக்கு சென்று செங்கல்பட்டு வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மழைக்குப்பின் இந்த சாலையில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago