முல்லை பெரியாறு அணையின் நீர்த்தேக்க பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை பாதுகாக்க நீர்மட்டத்தை உயர்த்த கேரளா இடையூறு: தமிழக விவசாயிகள் புகார்

By என்.கணேஷ்ராஜ்

முல்லை பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகளில் உருவாகியுள்ள ஆக்கிரமிப்புக் கட்டிடங்களை பாதுகாக்கவே கேரள அரசு நீர்மட்டத்தை உயர்த்தவிடாமல் தொடர்ந்து இடையூறு செய்து வருகிறது என தமிழக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

முல்லை பெரியாறு அணை யின் மொத்த உயரம் 152 அடி. 1979-ம் ஆண்டு நில அதிர்வினால் இந்த அணையில் பாதிப்பு ஏற்பட்டதாக பரவிய வதந்தியால் நீர்மட்டம் 136 அடியாக குறைக்கப்பட்டது. தமிழக விவசாயிகளின் தொடர் போராட்டங்களுக்குப் பிறகு 2014 மே 7-ம் தேதி உச்ச நீதிமன்றம் 142 அடி உயரத்துக்கு நீரைத் தேக்கிக் கொள்ளவும், பேபி அணையை பலப்படுத்திய பிறகு 152 அடியாக நீர்மட்டத்தை அதிகரிக்கலாம் என்றும் தீர்ப்பளித்தது. இருப்பினும் கேரள அரசு அவ்வப்போது அணையின் பலம், பாதுகாப்பு குறித்து மனுத் தாக்கல் செய்து கொண்டே இருப்பதால் நீதிமன்ற உத்தரவான 142 அடிக்கு நீரைத் தேக்குவதில் தொடர்ந்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.

அணையில் 152 அடி உயரத் துக்கு தண்ணீர் தேங்கும்போது 8 ஆயிரத்து 591 ஏக்கர் பரப்புக்கு நீர் தேங்கி நிற்கும். ஆனால் நீர்மட்டம் 136 அடியாகவே பல ஆண்டுகள் இருந்ததால் இதன் பரப்பு 4 ஆயிரத்து 678 ஏக்கராக குறைந்தது. இதனால் காலி நிலமாக இருந்த கேரள நீர்த்தேக்கப் பகுதிகள் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவை அனைத்தும் முக்கிய பிரமுகர்களுக்குச் சொந்தமான தாகும். 136 அடிக்கு மேல் நீர்மட்டம் உயரும்போது இந்த ஆக்கிரமிப்பு கட்டிடப் பகுதிகளில் தண்ணீர் தேங்கத் தொடங்கும். எனவே நீர்மட்டத்தை உயர்த்தவிடாமல் தடுக்கின்றனர்.

இதுகுறித்து 5 மாவட்ட பெரியாறு வைகை பாசன நீர் விவசாயிகள் சங்கத் தலைவர் அப்பாஸ் கூறியதாவது: குமுளியிலிருந்து தேக்கடி செல்லும் பாதை முழுவதும் முன்பு நீர்த்தேக்கப் பகுதியாக இருந்தது. இவை தற்போது ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. ஆனவச்சால் என்ற இடத்தில் சுற்றுலா வளர்ச்சி நிதியின் கீழ் வாகனங்கள் நிறுத்தும் கான்கிரீட் தளம் அமைத்துள்ளனர்.

இதேபோல் தங்கும் விடுதிகள், ரிசார்ட்ஸ் என்று அணையின் கரைப் பகுதிகளில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. நீர்மட்டத்தை உயர்த்தினால் கட்டிடப் பகுதிகளில் நீர் தேங்கி சுற்றுலா வருமானம் பாதிக்கும் என்பதால் அணை நீர்மட்டத்தை உயர்த்த கேரள அரசு தொடர்ந்து தடை ஏற்படுத்திக் கொண்டே வருகிறது என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்