கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிரில் புகையான் தாக்குதல் அதிகரித்து உள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்று பாசனம் மூலம் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் 2-ம் போகம் நெல்சாகுபடி செய்யப்படுகிறது. நெல் அறுவடையை நம்பியே விவசாயிகளின் வாழ்வாதாரம் உள்ளது. நிகழாண்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் விவசாயிகள் முதல் போக நெல் சாகுபடிக்காக வயலை சீர் செய்து நாற்றுகள் நடவு செய்தனர். நெற்கதிர்கள் நன்கு வளர்ந்து வரும்நிலையில், தொடர்ந்து பெய்த மழையால், புகையான் தாக்குதல் அதிகரித்தது.
இதற்காக வேளாண்மை அலுவலர்கள் மருந்துகள் தெளிக்க ஆலோசனைகள் வழங்கி, மருந்துகள் தெளித்தும் பலன் அளிக்கவில்லை என விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, கிருஷ்ணகிரி வட்டாரத்தில், 4,100 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கதிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில், தொடர்ந்து பெய்த மழையால் நெல்லில் புகையான் தாக்குதல் அதிகரித்தது. மருந்துகள் தெளித்தும் கட்டுப்படுத்த முடியவில்லை.
இதனால் மேலும் நெற்பயிர்களுக்கு நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அறுவடை செய்து அகற்றிவிட்டோம். சில இடங்களில் தீயிட்டு அழித் தனர். புகையான் நோயால் விவசாயிகளுக்கு அதிகளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago