தென்நாட்டுக்கு ஞானரத யாத்திரை மேற்கொண்ட தருமபுர ஆதீனம் குருமகா சன்னிதானம் நேற்று மதியம் தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வந்தபோது, அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரணகும்ப மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது.
தருமபுர ஆதீனத்தின் 27-வது குருமகா சன்னிதானம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சோழ நாட்டிலிருந்து பாண்டிய நாட்டுக்கு ஞானரத யாத்திரையை நேற்று தொடங்கினார்.
மயிலாடுதுறையிலிருந்து புறப்பட்ட யாத்திரை கும்பகோணம் வழியாக, தஞ்சாவூர் எல்லையான பள்ளியக்ரஹாரத்துக்கு நேற்று மதியம் வந்தடைந்தது. அப்போது, குருமகா சன்னிதானத்துக்கு வாணவேடிக்கை, மேளதாளத்துடன் பூரணகும்ப மரியாதை கொடுத்து திருவையாறு ஐயாறப்பர் கோயில் குருக்கள், அலுவலர்கள் வரவேற்பு அளித்தனர்.
பின்னர், தஞ்சாவூர் பெரிய கோயி லுக்கு வந்த குருமகா சன்னிதானத் துக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரணகும்ப மரியாதை அளித்து வரவேற்பளிக்கப்பட்டது.
அப்போது, செய்தியாளர்களிடம் குருமகாசன்னிதானம் கூறியது: முன்பெல்லாம் பாத யாத்திரையாக சென்று வந்தோம். தற்போது பாத யாத்திரையாக செல்ல முடியாததால், ஞானரத யாத்திரையாக செல்கிறோம். மதுரை, ராமேசுவரம், திருச்செந்தூர், திருநெல்வேலி செல்கிறோம். சிவசைலத்திலும், திருநெல்வேலியிலும் நடைபெறும் கோயில் குடமுழுக்கில் கலந்துகொள்ள உள்ளேன்.
திருஞானசம்பந்தர் சைவத்தை நிலைநிறுத்த சோழநாட்டிலிருந்து, பாண்டியநாட்டுக்கு சென்று சைவ மதத்தை பரப்பினார். எனவே, சைவத்தை நிலைநிறுத்த இந்த யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. 5 நாள் யாத்திரைக்கு பின்னர், வடநாட்டுக்கு நவ.29-ம் தேதி யாத்திரையாக புறப்பட்டு சென்று, அங்கு நடைபெறும் புஷ்கர விழாவில் கலந்துகொள்ள உள்ளேன் என்றார்.
பின்னர், மதுரைக்கு ஞானரத யாத்திரை வாகனம் புறப்பட்டுச் சென்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago