“திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலுக்கு வரும் மூத்த குடிமக்கள் சுவாமி தரிசனம் செய்ய வசதியாக பேட்டரி கார்கள் இயக்கப்படும்” என, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்தார்.
திருச்செந்தூர் கோயிலில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த பின்னர் அவர் கூறியதாவது: திருச்செந்தூரில் கடந்த 20.09.2021 அன்று ஆய்வு மேற்கொண்டபோது, 42 பணிகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அதில் 5 பணிகள் நிறைவடைந்துள்ளன. 11 பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 18 பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 8 பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் வாகனம் உள்ளே வந்து வெளியே செல்வதற்கு பாதை ஏற்பாடு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் சுவாமி தரிசனம் செய்ய வசதியாக பேட்டரி கார்கள் வாங்கப்படவுள்ளன. இதற்கு ஒப்பந்த விலைப்புள்ளி கோரப்பட்டுள்ளது. பக்தர்கள் திருக்கோயில் தொடர்பான நிகழ்வுகளை கண்டுகளிப்பதற்கு வடமேற்கு பிரகாரத்தில் உள்ள திறந்தவெளி கலையரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்னதானக் கூடம் விரிவாக்கம் செய்யப்பட்டு, 60 தொகுப்பூதிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நாள் முழுவதும் அன்னதானத் திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு 5,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் உணவருந்தி வருகின்றனர். குடில்கள் பகுதியில் அமைந்துள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிப்பறைகள் மிகவும் மோசமாக உள்ளன. அவற்றை இடித்து புதிதாக கட்ட மதிப்பீடு தயார் செய்ய அறிவுரை வழங்கப்பட்டது. அதன்பேரில், பெண்கள் சுகாதார வளாகம் ரூ. 4.90 லட்சம் மதிப்பீட்டிலும், ஆண்கள் சுகாதார வளாகம் ரூ. 4.98 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டுவதற்கு அனுமதி பெறப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. வள்ளி குகை பின்புறம் உள்ள தியான மண்டபம் பழுதடைந்துள்ளதை இடித்து அகற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தலின்பேரில் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago