சாத்தான்குளம் பழைய பேருந்து நிலைய பகுதியில் அரசு நூலகம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. மிகவும் தாழ்வான பகுதியில் நூலகம் அமைந்திருப்பதால், மழைக் காலங்களில் தண்ணீர் புகுந்து வாசகர்கள் சிரமப்படுகின்றனர். நூலக கட்டிடத்தின் மேற்கூரை ஆஸ்பெட்டாஸ் ஷீட்டால் ஆனது. அதுவும் முறையான பராமரிப்பின்றி இருப்பதால், மழை நீர் ஒழுகும் நிலை உள்ளது. இதனால் புத்தகங்கள் நனைந்து சேதமடைகின்றன. நூலகத்தை சீரமைத்து, தரமான மேற்கூரை அமைத்து தர வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சாத்தான்குளம் நகர காங்கிரஸ் தலைவர் வேணுகோபால், வர்த்தக சங்க செயலாளர் மதுரம் செல்வராஜ் ஆகியோர் கூறும்போது, “ சாத்தான்குளம் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களும், 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரும் இந்த நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். மழைக் காலங் களில் மழைநீர் உள்ளே புகுந்து புத்தகங்கள் சேதமாகி வருகின்றன. நூலகத்தை தமிழக அரசு மீட்டெடுக்க வேண்டும்” என்றனர்.
தூத்துக்குடியில் மழை குறைந்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வந்த மழை நேற்று குறைந்தது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று மழை பெய்யவில்லை. நேற்று பகலில் தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் வெயில் அடித்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர் வேகமாக வடியத் தொடங்கியது.
மழை குறைந்ததை தொடர்ந்து மாவட்டத்தில் விவசாயிகள் சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர். அதேநேரத்தில் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு மீனவர்கள் நேற்றும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: விளாத்திகுளம் 2 மி.மீ., காடல்குடி 2 மி.மீ., வைப்பார் 1 மி.மீ., கயத்தாறு 5 மி.மீ., கடம்பூர் 5 மி.மீ., ஓட்டப்பிடாரம் 2 மி.மீ., எட்டயபுரம் 19.2 மி.மீ., தூத்துக்குடியில் 2.3 மி.மீ. மழை பதிவாகியது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago