காட்பாடியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிந்தும், அதற்காக தோண்டப்பட்ட மண்ணை அகற்றாத ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்தார்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால், நகரின் தாழ்வான இடங்களில் மழைநீர் குட்டைப்போல் தேங்கியுள்ளது. குறிப்பாக, கொண வட்டம், முள்ளிப்பாளையம், சேண்பாக்கம், காட்பாடி, விருதம்பட்டு ராஜீவ்காந்தி நகர், கழிஞ்சூர்,வி.ஜி.ராவ் நகர், மதிநகர் உள்ளிட்டபகுதிகளில் மழைநீர் ஆங்காங்கே தேங்கியும், சில இடங்களில் குடியிருப்புப் பகுதிகளில் மழை வெள்ளம் புகுந்து மக்களை வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
காட்பாடி வி.ஜி.ராவ் நகரில் உள்ள 5 செக்டார்களும் குட்டி தீவுப்போல் உள்ளது. அங்குள்ள மக்கள் பணிக்கு செல்ல முடியாமலும், பள்ளி,கல்லூரி மாணவர்கள் கல்வி நிறுவனங்களுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இது குறித்து வந்த தகவலின் பேரில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் காட்பாடி பகுதியில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். காட்பாடி காந்திநகர், அக்சீலியம் கல்லூரிசாலை, வி.ஜி.ராவ் நகர் பகுதியில் மழை வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளை ஆட்சியர் ஆய்வு செய்தார். பிறகு, அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
இதனைத்தொடர்ந்து, பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை மூடுமாறு மாநகராட்சி ஊழியர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘மாநகராட்சி 1-வது மண்டலத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப் படவில்லை.
பருவமழையை முன்னிட்டு பாதாள சாக்கடைப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை சரியாக மூடவும், அங்குள்ள மண்ணை அகற்ற வேண்டும் என ஏற்கெனவே ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினோம். ஆனால், அப்பணிகளை அவர் செய்ய வில்லை. எனவே, மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அப்பணிகள் மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான செலவை ஒப்பந்ததாரர் கணக்கில் சேர்க்கப்படும். இதற்கான விளக்கம்கேட்டு ஒப்பந்ததாரருக்கு நோட்டீஸ் வழங்கப்படும்.
மேலும், பேரிடர் மேலாண்மை விதியின் கீழ் ஒப்பந்ததாரர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். காட்பாடியில் மழை நீர் சூழ்ந்துள்ளஇடங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மழைநீரை மோட்டார் மூலம் உறிஞ்சி எடுக்கவும், கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரி சுத்தம் செய்யவும் மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வேலூர் நகரில் குறிப்பாக போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் கால்நடைகள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. எனவே, கால்நடை உரிமையாளர்கள் தங்களது கால்நடைகளை சாலைகளில் விடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையென்றால் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள் மீட்டு சந்தைகளில் விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் தொகை அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்படும்’’ என்றார்.
இதைத்தொடர்ந்து, காட்பாடி அடுத்த செங்குட்டை பகுதியில் உள்ள நரிக்குறவர்கள் குடியிருப்பு பகுதிக்கு சென்ற ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் அங்கு மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். பிறகு, வண்டறந் தாங்கல் ஏரியில் இருந்து தண்ணீர் புகுந்த பகுதிகளை அவர் ஆய்வு செய்தார்.
நரிக்குறவர் காலனியில் நீண்ட காலமாக வசித்து வரும் 28 குடும்பங்களைச் சேர்ந்த 110 பேருக்கு மாற்று இடத்தில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்குமாறு காட்பாடி வருவாய் துறையினருக்கு ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago