கலசப்பாக்கம் தொகுதியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
கலசப்பாக்கம் வட்டம் வில்வராணி நட்சத்திர கோயில் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. தி.மலை நாடாளுமன்ற தொகுதி மாற்றுத்திறனாளிகளுக்கான ஏ.டி.பி.ஐ திட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர், ஏ.எல்.எம்.சி.ஓ நிறுவனம், மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான பயனாளிகள் தேர்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் முருகேஷ், எம்எல்ஏ சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூடுதல் ஆட்சியர் பிரதாப் வரவேற்றார். நிகழ்ச்சியில் நாடாளுமன்றஉறுப்பினர் அண்ணாதுரை பேசும்போது, ‘‘மாற்றுத்திறனாளிகளுக்கு நடத்தப்படும் மருத்துவ பரிசோதனையில் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, சிறப்பு சக்கர நாற்காலி, பிரெய்லி கிட் என 14 வகையான நல உதவிகள் வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள் இன்று உலகத்தையே திரும்பி பார்க்க வைக்கும் நிலையில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். இவர்களுக்கு உறுதுணையாக நாம் செயல்பட்டால் போதும். எனது தொகுதிக்குட்பட்ட 6 தொகுதிகளிலும் இதுபோன்ற மருத்துவ முகாம்கள் நடத்தப்படும். இதில், பங்கு பெற்றவர்கள் உபகரணங்களை பெற்றுக்கொண்டு நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும்’’ என்றார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் முத்து குமாரசாமி, ஆரணி கோட்டாட்சியர் கவிதா, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், துணைத் தலைவர் பாரதி, ஒன்றியக்குழு தலைவர்கள் அன்பரசி ராஜசேகரன் (கலசபாக்கம்) சுந்தரபாண்டியன் (புதுப்பாளையம்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago