மதுரையில் வேலை வாங்கி தருவதாக ரூ.26 லட்சம் மோசடி : மருத்துவ ஊழியர் உட்பட 4 பேர் கைது

By செய்திப்பிரிவு

மதுரை ஐராவதநல்லூரைச் சேர்ந்தவர் பார்த்திபராமன். இவரிடம் கடந்த 2018-ல் மதுரையைச் சேர்ந்த நாதன், அவரது மனைவி கிருஷ்ணவேனி, இவர்களது மகன் கணேசன், மகள் அம்பிகா ஆகியோர் மின் வாரியத்தில் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்து, ரூ.12.15 லட்சம் வாங்கினர். ஆனால் வேலை வாங்கித் தராமல் ஏமாற்றிவிட்டனர். இது குறித்த புகாரின்பேரில், தெப்பக்குளம் போலீஸார், நாதன் அவரது மனைவி, மகன், மகள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

கோவை பாப்பநாயக்கன்பாளையம் பிஆர்எஸ் புதிய காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் பொன்னீலாவிடம் (31), மதுரை கீழ வைத்தியநாதபுரம் ராஜேந்திரன் (51), திருமங்கலம் ராமர், சோனை முத்து ஆகியோர் 2020 மே மாதம் வருவாய்த்துறையில் வேலை வாங்கித் தருவதாக தெரிவித்து ரூ.1 லட்சம் ஏமாற்றியுள்ளனர். இது குறித்த புகாரின்பேரில் ராஜேந்திரன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்த செல்லூர் போலீஸார் ராஜேந்திரனை கைது செய்தனர். இருவரை தேடுகின்றனர்.

மதுரை ஆலங்குளம் எஸ்விபி நகரைச் சேர்ந்தவர் ராஜேஷ் (34). இவரிடம் 2019-ல் சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த சாந்தி, மூர்த்தி, காஞ்சிபுரம் யுவராஜ் ஆகியோர் விமான நிலையத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.8 லட்சம் வாங்கியுள்ளனர். வேலை வாங்கித் தராமல் ஏமாற்றியதோடு, கொடுத்த பணத்தையும் திருப்பித் தரவில்லை. இது குறித்த புகாரின்பேரில் கூடல்புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில் யுவராஜ் கைது செய்யப்பட்டார்.

மதுரை குலமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்மொழி (26). மதுரை பரவையைச் சேர்ந்தவர் லதா. சிவகங்கை மாவட்டம், திருபாச்சேத்தியைச் சேர்ந்தவர் பாண்டிச்செல்வம். மதுரை அரசு மருத்துவமனையில் காசாளராக பணிபுரிபவர் தங்கவேல். இவர்கள் மூவரும் கடந்தாண்டு ஜனவரி மாதம் தமிழ்மொழியை சந்தித்து, அவரது கணவருக்கு மதுரை அரசு மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாக கூறி, ரூ.5 லட்சம் வாங்கியுள்ளனர். ஆனால் வேலை வாங்கிக் கொடுக்கவில்லை, கொடுத்த பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்த புகாரில் மதிச்சியம் போலீஸார் 3 பேரையும் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்